Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 24

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 24

ந்த செமஸ்டர் லீவில் அர்ஜுன் அவன் வீட்டுக்கு சென்று சேரும் முன்னரே பிரச்சினைகள் அவனுக்காக எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தன. அவன் தாத்தா வழி சொத்துப் பிரச்சினை பூதாகரமாக வெடித்துக்கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு முறை போன் செய்த போதும், அவன் அம்மா ஜானகி எதையுமே அவனிடம் சொல்லாமல் மூடி மறைத்து விட்டார். இப்போது தான் அவனுக்கு எல்லா உண்மையும் தெரிந்தது.

அவன் அப்பாவின் கூடப் பிறந்த சகோதரர்களே அவர்களின் எதிரிகள் போல செயல்பட்டனர். எல்லா சொத்தையும் அவர்களே அனுபவிக்க திட்டம் தீட்டி, எப்படியோ அவர்கள் குடியிருந்த வீடு, தோட்டம் என அனைத்தையும் எழுதி வாங்கி விட்டனர். இது எதுவுமே அர்ஜுனுக்குத் தெரியாது. அவனுக்கு எதை நினைத்து கவலை கொள்வது எனத் தெரியவில்லை. அவர்களிடம் சண்டை போடவும், கோர்ட், கேஸ் என அலையவும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

அவனை அப்படி வளர்த்திருந்தார் ஜானகி. வேறு வழி தெரியாமல் அவன் அம்மாவையும் சென்னைக்கே அழைத்து வந்து விட்டான் அர்ஜுன். பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே படிக்க முடிவெடுத்தான்.

தன்னால் முடிந்த சிறு சிறு ப்ராஜெக்ட் வொர்க்குகளை செய்து கொடுத்து அதில் வரும் வருமானத்தில் அப்போதைக்கு வாழ்ந்து வந்தனர். விஷயம் கேள்விப்பட்ட அவர்களின் வீட்டு ஓனரும் வாடகையைக் குறைவாகவே வாங்கினார். அதே சமயம் அவர்களுக்கு முடிந்த உதவியையும் செய்தார்.

அவன் படிப்பு செலவை அவனது பழைய கல்லூரி முதல்வர் ஏற்கவில்லை என்றால், இன்னும் அவனுக்கு அது சிரமமாக இருந்திருக்கும். விஷயம் கேள்விப்பட்ட அவரும் அவர்களுக்கு மேலும் ஏதும் உதவி தேவை என்றால் தயங்காமல் கேக்குமாறு கூறினார். இருந்தாலும் அவரை அதிகமாக தொந்தரவு செய்ய மனமில்லாமல் சரி என்று அப்போதைக்கு சொல்லி விட்டான் அர்ஜூன்.

இது அனைத்தும் ரவிக்கு மட்டுமே தெரியும். வேறு எவருக்கும் அப்போது தெரியவில்லை. அம்மா ஜானகி அவனுக்கு எப்போதும் ஆறுதலாக பேசிக்கொண்டே இருப்பார். அதனால், எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ளலாம் என்ற தெம்பு அவனுக்கு வந்துவிடும்.

அதே போல், இத்தனை கஷ்டங்களிலும் அவன் மனம் அவ்வப்போது அஞ்சலியை நினைக்காமல் இல்லை. அந்த நேரங்களில் மட்டுமே அவன் பிரச்சினைகளை மறந்து அவன் மனம் சற்று அமைதியாக இருப்பதாய் உணர்வான். அடுத்த செமஸ்டர் எப்போது ஆரம்பிக்கும் என்ற ஆவலில் இருந்தான்.

கல்லூரி வந்த முதல் நாளே அஞ்சலியைக் காணும் ஆவலில் இருந்தான் அர்ஜுன். ரவி அவனைக் கேலி செய்துகொண்டே இருந்தான். அவனை முறைத்தவாறு இருந்தவன் கண்ணில் பட்டாள் அஞ்சலி. தன்னை அறியாமல் அவன் இதழ்கள் புன்னகை சிந்தின. அவளிடம் ஓடி வந்தான்.

“ஹாய் அஞ்சலி. எப்படி இருக்க.? லீவெல்லாம் எப்படிப் போச்சு.? உங்க அப்பா இப்போ எப்படி இருக்கார்.? நான் உனக்கு போன் பண்ணேன். ஆனா, நீ எடுக்கவே இல்ல. என்னாச்சு, என் மேல் கோபமா.?” என்றான் அர்ஜுன் ஆவலில்.

ஒரு நிமிடம் நின்றவள், “அர்ஜுன், நான் தான் நாம தனியா எதுவும் பேசிக்க வேண்டாம்னு மொதல்லையே சொல்லிருக்கேன் இல்ல. திரும்பவும் ஏன் இப்படி பண்ற.? எனக்கு ஒரு மாதிரி இரிடேட்டிங்கா இருக்கு. ப்ளீஸ், புரிஞ்சுக்கோ.” என்று முகத்தில் அறைந்தார் போல் பேசிவிட்டு வேகமாகச் சென்று விட்டாள்.

அர்ஜுனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. இப்போது தான் ஏதும் தவறாகக் கேட்டு விட்டேனா என்பது போல் ஆனது அவனுக்கு. இதை கவனித்துக்கொண்டே அவள் பின்னாடி வந்துகொண்டிருந்தாள் மது. அவளைப் பார்த்ததும் ஒருவாறு சமாளித்து நின்றான்.

“ஹாய் அர்ஜுன். எப்படி இருக்க.? ஏன் ஒரு மாறி இருக்க.? அஞ்சலி ஏதும் சொன்னாளா.?” என்றாள் மது.

“நல்லா இருக்கேன் மது. அஞ்சலி எதுவும் சொல்லல. எங்க ஷாலினி, ரூபா இல்லாம நீங்க ரெண்டு பேர் மட்டும் வரீங்க.?” என்று மழுப்பிக்கொண்டே பேச்சை மாற்றினான் அர்ஜூன்.

“ஷாலினி, மார்னிங் தான் வந்தா, கொஞ்சம் லேட் ஆகும்னு எங்களை முதல்ல கிளம்ப சொல்லிட்டா. ரூபா வீட்ல எதோ விஷேஷமாம். அதனால, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் வருவா. சரி, அதெல்லாம் இருக்கட்டும். நான் முதல்ல கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதிலே சொல்லல.? அஞ்சலி உன்கிட்ட ஏதாவது ஹார்ஷா பேசினாளா.?”

“அப்படியெல்லாம் எதுவும் இல்ல.” என்று முகத்தை தொங்க வைத்தவாறு சொன்னான் அர்ஜூன்.

“ஹூம்ம். ஐ நொவ். நான் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் வந்துட்டிருந்தேன். அவ என்கிட்டயே வந்ததிலிருந்து சரியா பேசல. கேட்டதுக்கு பதில் சொன்னா. அவ்ளோதான். ரொம்ப சோகமாவே இருக்கா. என்ன ப்ராப்ளம்ன்னு கேட்டா, ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டுப் போறா. எப்பவும் என்கூட ஏதாவது பேசிட்டே வரவ, ஏதோ அவசரமா எக்ஸாம்க்கு போற மாதிரி முன்னாடி போறா. எனக்கே என்ன சொல்றதுன்னு புரியல. என்னோட விஷயத்த சந்தோஷமா அவகிட்ட ஷேர் பண்ணிக்க கூட முடியல தெரியுமா.?” என்று மது சொன்னதும், அர்ஜுன் அவளை சந்தேகமாகப் பார்த்தான். உடனே, மது அன்று நடந்தவற்றைக் கூறினாள்.

“ஹே.. ரியல்லி. கங்க்ராட்ஸ் மது. நிஜமா, ரொம்ப ஹாப்பியா இருக்கு.” என்று அவள் கைகளைக் குலுக்கினான்.

“ம்ம்.. தாங்க்ஸ்.” என்றாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, பின்னாலிருந்து ரவி வந்தான்.

“என்னாடா ஆச்சு.? மது என்ன சொல்றாங்க.?” என்று கேட்டதும் அர்ஜூன் விஷயத்தைச் சொல்ல, ரவியும் அவளுக்கு,

“ஹே.. வாழ்த்துக்கள் மது.” என்றான்.

“ம்ம்.. பரவால்ல. லவ் கம் அரேஞ்ச் மேரேஜ் பண்ணிக்க போற. உன்ன மாதிரி தான் இருக்கணும்.” என்றான் அர்ஜுன்.

“அதென்ன அர்ஜுன். உனக்கும் அப்படித்தான் நடக்கும் பாரு.”

“ஹூம்ம். அப்படி நடக்க சான்சே இல்ல மது. அதுக்கு மொதல்ல அந்தப் பொண்ணு ஒத்துக்கணும். அப்பறம் தான் எல்லாம். இல்லாடா மாப்ள.?” என்றான் ரவி.

“டேய் சும்மா இருடா..” என்று அர்ஜூன் ரவியை லேசாக அடித்தான்.

ரவி எதை நினைத்து அப்படி சொல்கிறான் என்பதை மது புரிந்து கொண்டாள். இருப்பினும், அர்ஜூனுக்கு ஆறுதலாகப் பேசினாள்.

“ம்ஹூம்ம். அதெல்லாம் இல்ல. நீ வேணும்னா பாரு ரவி. கண்டிப்பா நான் சொல்றது நடக்கும். அப்போ, நீங்க கண்டிப்பா என்னைத் தான் நினைப்பீங்க.” என்றாள் மது தீர்க்கமாக.

“ம்ம்.. அது அப்படி நடக்கும் போது பாக்கலாம் மது.” என்றான் அர்ஜூன்.

மூவரும் அப்படியே பேசிக்கொண்டே அவர்கள் கிளாஸூக்கு வந்து சேர்ந்தனர். கிளாஸில், அனைவரையும் நீண்ட நாட்கள் கழித்து பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அஞ்சலி மட்டும் உம்மென்றே இருந்தாள். கிளாஸ் இன்சார்ஜ் உள்ளே வந்ததும் அனைவரும் அமைதியானார்கள்.

“குட் மார்னிங் ஸ்டூடண்ட்ஸ். ரொம்ப நாள் கழிச்சு எல்லாரையும் பார்க்கறேன். வெரி ஹாப்பி. தென், உங்க ரிசல்ட் வந்துடுச்சு. இந்த டைமும் உங்க கிளாஸ் ரெப்ரசென்டேடிவ் ரெண்டு பேரும் போட்டி போட்டு மார்க் வாங்கிருக்காங்க. அவங்க தான் காலேஜ் டாப்பர். யா, கமான் கைஸ். கம்.” என்று அவர் கூறியதும் அஞ்சலியும், அர்ஜூனும் முன்னே வந்தனர்.

“இந்த டைமும் வேற யாருக்கும் சான்ஸ் கொடுக்காம நீங்களே ஃபர்ஸ்ட் வந்துட்டீங்களே. சோ, வேற ஆப்ஷன் இல்ல. எகைன் யூ போத் ஆர் தி ரெப்ரசென்டேடிவ்ஸ் ஆப் திஸ் கிளாஸ்.” என்றார் அவர்.

உடனே, அஞ்சலி “சார், ஒரு ரெக்வஸ்ட். இந்த டைம் அர்ஜூனே ரெப்ரசென்டேடிவா இருக்கட்டும். நான் வேண்டாம் சார். எனக்கு ஹெல்த் வைஸ் கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு. அதனால தான் சார்.” என்றாள் திடீரென்று.

அவரும் எதுவும் சொல்லவில்லை. சரி என்று கூறிவிட்டார். ஆனால், அர்ஜூனுக்குத் தான் கஷ்டமாக இருந்தது. அஞ்சலி வேண்டுமென்றே தன்னிடம் இருந்து விலகிப் போவதாய் உணர்ந்தான்.

மதுவும் இதை கவனித்துகொண்டு தான் இருந்தாள். இன்று என்ன ஆனாலும் அஞ்சலியிடம் பேசிவிட வேண்டுமென்று வீட்டுக்கு வந்தாள். அவளை அழைத்துக்கொண்டு தனியே சென்றாள்.

“அஞ்சலி. உனக்கு என்ன ப்ராப்ளம்.? நீ ஏன் இப்படி இருக்க.? இன்னைக்கு கிளாஸ்ல ஏன் எல்லார் முன்னாடியும் அப்படி சொன்ன.? அப்படி என்ன ஹெல்த் ப்ராப்ளம் உனக்கு.? ஏன் என்கிட்ட கூட எதுவுமே பேச மாட்டிங்கற.? என்னதான் ஆச்சு.? தயவு செய்து சொல்லு.” என்று அவளை விடாப்பிடியாகக் கேட்டாள் மது.

அவள் பேச ஆரம்பித்த போது எதுவும் பேசாமல் நின்றவள், இப்போது அழுது கொண்டு இருந்தாள். மது பதறிவிட்டாள்.

“ஏய்ய்... அஞ்சலி ஏன் அழற.. இங்க பாரு.. என்ன நடந்துச்சுன்னு சொல்லு.? எதுவுமே சொல்லாம இப்படி அழுதா, நான் என்னன்னு நினைக்கறது.” என்று கேட்டாள்.

அவளுக்கு அப்போதுதான் மதுவிடம் சொன்னால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று நடந்த அனைத்தையும் சொல்லி விட்டாள். மதுவும் அதிர்ச்சியானாள்.

“ஹே.. அஞ்சலி. என்ன சொல்ற.? உனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை. நிஜமா நீ வந்ததும், அர்ஜூன்கிட்ட உன் லவ்வ சொல்லிடுவேன்னு நெனச்சேன். ஆனா, இந்த மாதிரி நடக்கும்னு நான் எதிர்பார்க்கல அஞ்சலி. உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரில. பட், நீ ஒண்ணும் கவலப்படாத. எல்லாமே ஒரு நாள் சரியாகிடும்னு நம்பிக்கை இருக்கு எனக்கு. நீ அழாத அஞ்சலி.” என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டாள் மது.

“ஹூம்ம். எப்படி மது கவலைப்படாம இருக்கறது.? என் லைஃப் அவ்ளோதான். யாரோ ஒருத்தனுக்கு என்னோட விருப்பமே இல்லாம கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணியாச்சு. எங்கப்பாவுக்கு என்னை விட, அவரோட கெளரவம் போய்டக்கூடாது அது தான் முக்கியம். அது மட்டும் இல்ல மது, இதுக்காக நான் அர்ஜூனையும் கஷ்டப்படுத்திட்டேன். இன்னைக்கு அவன் எவ்ளோ ஆசையா என் கிட்ட பேச வந்தான் தெரியுமா.? ஆனா, நான் அவனோட மனச புண்படுத்தற மாதிரி பேசிட்டேன். தேவையில்லாம அவன் மனசுல ஆசைய வளர்க்க விரும்பல மது. அவனாவது நல்லா இருக்கட்டும்.” என்று அழுதாள்.

மதுவிற்கு என்ன சொல்லி அஞ்சலியை ஆறுதல்படுத்துவது என்று தெரியவில்லை. அவளை மீறி எல்லாம் நடந்துவிட்டதால், அவளால் என்ன செய்ய முடியும்.? என்றுதான் தோன்றியது. ஆனால், இது எதுவும் தெரியாத அர்ஜூனும் பாவம் என நினைத்தாள். இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது.? யாரிடம் உதவி கேட்பது.? என்று யோசித்துக்கொண்டிருந்தாள் மது...


(தொடரும்...)
 
Last edited:
Top