Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?1?

Advertisement

Rudhra Vikram

Member
Member
மேகத்தின் கரு விழிகள் பூமியை வட்டமிட சீரிய காற்றுடன் ஒய்யாரமாக இடி இடிக்க வானில் அங்காங்கே விரிசல் விழுந்தது போல மின்னல் தோன்றி அந்த இரவு நேரத்தை பயங்கரமாக காட்டியது.

வானம் பிளந்து மழைச் சாரல் பூமியை அர்ச்சிக்க காற்று தென்றலாய் சில்லிட்டது. மழைக் கொட்டும் சப்தம் புதியதொரு இசை அமைக்க அவையெல்லாம் தரும் களிப்பில் ஆழ்ந்திருந்தவள் திடீரென கிடுகிடுவென இடி இடித்ததில் திடுக்கிட்டு எழுந்தாள்...

" ச்சே... கனவுல கூடவா மழைல நினைய விட மாட்டாங்க.... "

சன்னல் வழி ரசித்தவள் அப்படியே உறங்கி விட அவளின் முகத்தில் தீர்த்தம் என வானத்து தேவர்கள் சாரலைத் தெளிக்க மழையில் நனைகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்தாள் அவள்.
தூக்கம் கலைந்த பிறகே அது கனவு என்றுரைக்க ஏக்கத்தோடு மழையைப் பார்த்தாள்.

தன் மேசையில் இருந்த டைரியை ஒரு முறை வருடியவள் பின் அதை கப்போர்டில் வைத்து விட்டாள்...

கருப்பு நிற மேலுறை அணிந்து கையில் குடையோடு அந்த ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தவள் கால் போன போக்கில் நடந்து சென்றாள்...

காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு கையை நீட்டி மழையுடன் விளையாடியபடி வந்தாள் அவள்.

" என்ன மழை.... என்ன மழை.... அப்டியே ஒரு குத்தாட்டம் போட்டா எப்டி இருக்கும்.... " என்று தனக்கு தானே பேசிக் கொண்டு வந்தாள் அவள்.

திடீரென வைப்ரோட் மோடில் இருந்த தொலைபேசி அதிர ஏதோ மின்சாரம் பாய்வது போல இருந்தது.

" அடச்சே... இனி இந்த வைப்ரோட் மோட ஆன் பண்ணவே கூடாது டா.."
என்றபடி தொலைபேசி திரையைப் பார்த்ததும் பேய் அறைந்தார் போல சிலையாகி நின்றாள் அவள்...

" மோகினி பிசாசு " என்ற பெயர் அந்த திரையில் மின்ன அதை கண்ணெடுக்காமல் பார்த்தாள் அவள்...

" அய்யோ.... இந்த வார்டன் ஆத்தாக்கு நம்ம மேலையே கண்ணா இருக்கே... முதல்ல நமக்கு ஒரு திருஷ்டி சுத்தி போட்டுக்கனும்" தனக்கு தானே புகழாரம் சூட்டி கொண்டு முன்னேறினாள்...

மீண்டும் தொலைபேசி ஒலிக்க... அதை கடுப்புடன் எடுத்தாள் அவள்..

" ஹலோ.. மேம்.... " என அடுத்த நிமிடமே பணிவாக வினவியவளைப் பார்த்து ஏளனமாக சிரிப்பது போல இடியும் மின்னலும் கர்ஜித்தன.

" என்ன மிஸ். ஏஞ்சல்... இந்த அர்த்த
இராத்திரில தனியா வெளிய போற அளவுக்கு தைரியம் வந்துருச்சா... "
அவரின் குரல் ஆத்திரத்தில் ஒலித்தது.

" தாங்கள் டயல் செய்த நபர் தற்போது மொபைலைச் சுவிச் ஆஃப் செய்ய உள்ளார். அதனால் மீண்டும் முயற்சிக்க வேண்டாம்... " என்றவள் அதை கட் செய்து விட்டு அந்த தொலைபேசியைச் சுவிட்ச்
ஆஃபில் போட்டபின் நடக்கத் தொடங்கினாள்.

இன்னும் ஒரு நிமிடம் ஆகி இருந்தால் கூட அவளின் காதில் இரத்தம் வராத குறையாக பேசுவார் அவர்(மிஸ். சைலஜா). அதை பல முறை கேட்டாகி விட்டது...புதிதாக எதாவது கூறினால் தான் அவள் செவி மடுக்க வாய்ப்புள்ளது.

ரோட்டில் எங்கும் மழை நீர் தேங்கி நிற்க அதில் காலால் எட்டி உதைத்துக் கொண்டு வந்தாள் அவள்.

" இப்ப என்ன லேட் டைம்ன்னு இந்த
ஆத்தா நம்மல திட்டறாங்க... ஒன்லி எயிட் ஓ க்லாக் " முணங்கியபடி வந்தவளின் காதில் யாரோ அவளை போலவே புலம்புவது போல் இருந்தது.

" யாரு அது நம்ம கேஸூ.... " என சத்தம் வந்த திசை நோக்கி அவள் கால்கள் நகர்ந்தன.

ஏதோ ஒன்று வலியில் முணங்குவது போல இருக்க... அந்த மழையின் இசை இப்போது இரைச்சலாக தெரிந்தது அவளுக்கு.

அவள் நடந்து சென்ற பாதையின் ஒரு ஓரத்தில் ஏதோ ஒரு வெள்ளை நிற உருவம் கிடந்தது. மெல்ல அதன் அருகில் சென்றாள் அவள்.

அது இன்னதென்று தெரியாமல் அடி மேல் அடி எடுத்து வைக்க அந்த உருவமோ மரண வலியில் கத்தியது. அவளுக்கோ கை கால் நடுங்க துவங்கியது.

என்னவென்று ஒன்றும் புரியாமல் அதன் அருகில் நெருங்கி இருந்தாள். மழை நீர் சிறு குட்டைப் போல தேங்கி கிடக்க அதில் விழுந்து மூச்சு கூட விட முடியாமல் திணறியது அந்த ஞமலி. அதை பார்த்ததும் பதறி போனாள் அவள். கையில் இருந்த குடையை நழுவ விட அதுவோ வீசிய காற்றில் அடித்து செல்லப்பட்டது.

" இந்த கொட்டுற மழைல இத யாரு இப்படி தனியா விட்டுட்டு போனா.." என அதன் உரிமையாளரை ஏசினாள் அவள்.

நீருக்குள் பாதி மூழ்கி இருந்த அதன் தலையை தன் கையால் தாங்கி பிடித்து அதை தட்டி எழுப்ப முயற்சித்தாள்..

" ஓய்ய்... குட்டி.... எழுந்திரு.... கமான் டாகி... " கொட்டும் மழையில்
முழுவதுமாக நனைந்தாலும் அதை இந்நிலையில் விட்டுச் செல்ல மனம் சற்றும் ஓவ்வமால் பல முறை முயற்சித்துப் பார்த்தாள் அவள்.

அதை கடினப்பட்டு தூக்க முயற்சிக்க அதுவோ பிடிக்க முடியாது நழுவிச் சென்றது. மீண்டும் அதன் மீது கை வைக்க போகும் போதே உணர்ந்தாள் அதை.....

உள்ளங்கை முழுக்க இரத்தம் படிந்திருக்க ஒரு நிமிடம் உறைந்து போனாள் அவள்.

" கு... கு... குட்டி.... இர... இரத்தம்... வ.. வருது... ஹே.... கு... குட்டி... " இரத்தத்தைப் பார்த்ததும் வார்த்தை வராமல் தந்தி அடிக்க ஆரம்பித்தது.

" இதுக்கு என்ன ஆச்சு... எ.. எழுந்திரு.... குட்டி.... " என்றவளின் கண்கள் எதற்கென்றே தெரியாமல் கண்ணீரை வார்த்தது.

எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு சுற்றி முற்றி பார்க்க.... அங்கு ஒரு வீட்டின் முன் தோட்டத்தில் ஒரு சக்கர வண்டி(wheelbarrow) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதை பார்த்ததும் ஓடி சென்று அங்கிருந்து அதை எடுத்து வந்தவள் அந்த குட்டியை அதில் கிடத்தி அருகில் இருந்த அவளின் தோழி வீட்டை அடைந்தாள்.

கதவு தட்டும் சத்தம் விடாமல் கேட்க
அலுத்துக் கொண்டு எழுந்து வந்தவள் கதவை திறந்ததும்...

" ஏஞ்சல்... உனக்கு எத்தன தடவை சொல்றது... இப்டி ஆசிரமத்தில இருந்து வெளிய வராதுனு... " அவள் பேசிக் கொண்டு போக அவள் கூறியதை எதுவும் காதில் வாங்காமல் உள்ளே சென்று ஒரு வெள்ளை துணியை எடுத்து மேசையில் விரித்து வைத்தாள் ஏஞ்சல்.

அவள் செய்கை எதுவும் புரியாமல் புருவங்கள் முடிச்சிட அவளைப் பார்த்தாள் மேரி.

" மேரி... பேசுறதுக்கு நேரமில்ல ... சீக்கிரம் போய் ஃபஸ்ட் எயிட்
கிட் அ எடுத்துட்டு வா.... " அவளைத்
துரிதப்படுத்த ஏஞ்சலை இத்தனை பதற்றத்தில் கண்டிராதவள் பயந்து தான் போனாள்.

ஏஞ்சல் வெளியே வந்து அதை கையில் கிடந்தியவள் நேரே அந்த மேசையில் படுக்க வைக்க... மேரி அவளை ஒன்றும் புரியாமல் நோக்கினாள்.

" மேரி... தேர் இஸ் நோ டைம் டு எக்ஸ்பிளைன்.... சீக்கிரம் ஏதாவது பண்ணு.. இரத்தம் நிக்காம வருது." என்க அதிலேயே அதன் தீவிரத்தை உணர்ந்தவள் தன்னால் முடிந்த அளவு சுத்தம் செய்து சிகிச்சை அளித்தாள்.

உடைந்து போன கண்ணாடி குப்பிகளை மிகவும் கவனமாக எடுத்தாள் மேரி. அந்த நகரிலேயே புகழ் பெற்ற மருத்துவச்சியாக இருக்கும் அவள் வீட்டிலேயும் மருத்துவ சாதனங்களை வைத்திருந்ததால் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு கையுறையை கழற்றி
தனியாக வைத்தாள்.

" உடைந்து போன கண்ணாடி துகள்கள் எதாவது உள்ள போய்ருக்கான்னு தெரியல ஏஞ்சல்... என்னால முடிஞ்ச வர பாத்துட்டேன்... இப்டி ஒரு ஜீவன கஷ்டப்படுத்த எப்டி தான் மனசு வந்ததோ தெரியல.... ஒரு வாரத்துக்கு இங்கையே வச்சி ட்ரீட்மென்ட் பாத்துக்கலாம் ஏஞ்சல்...
ஆனா.. அதுக்கு மேல என்னால முடியாது.... " என்றுவிட்டு செல்ல அவளையே பார்த்து நின்றாள் அவள்.

உள்ளே சென்று மாற்று உடை எடுத்து வந்து ஏஞ்சலின் கையில் திணித்து " போய்.. மாத்திக்க... " என்க மாற்றுடையில் வந்தாள் ஏஞ்சல்.

வந்ததும் வராததுமாய் அந்த நாய் படுத்துக் கிடந்த மேசையருகில் சென்றவள் அதன் அருகிலேயே படுத்து சாப்பிட கூட இல்லாமல் உறங்கி போனாள்.

*****

அடுத்த நாள்...

" முடியாது மிஸ். மேரி... இட்ஸ் ஓவர். அவ பண்ற அட்டூழியங்கள இதுக்கு மேல எங்களால தாங்க முடியாது.. ப்ளீஸ்... கூட்டிட்டு போய்ருங்க... " என்று கையெழுத்து கும்பிட்டார் அந்த வார்டன், மிஸ். சைலஜா.

" ப்ளீஸ்.. மேம்.. அப்படி எல்லாம் சொல்லாதீங்க... " அவரிடம் கெஞ்சி கொண்டிருந்தாள் மேரி.

" நோ மிஸ். மேரி... உங்க பேருக்காக தான் நான் மரியாதை கொடுத்து அவளை இன்னும் வச்சிருக்கேன்..

யாராச்சும் மார்க் கம்மியா எடுத்திருந்தா இவளே ரிப்போர்ட் கார்ட்ல சைன் போட்டு அனுப்பிட்றா...

சாக்லேட் வாங்கி குடுத்து குழந்தைங்கள கெடுக்குறா...

படிக்கிற குழந்தைங்கள கூப்பிட்டு வச்சி கதைக்கிறா... இப்டி லாட் ஆஃப் டிஸ்டர்பன்ஸ்....

மழை வந்தா ஆசிரமத்து குழந்தைங்கள கூட்டிட்டு குத்தாட்டம் ஆட வேண்டியது... இதுக்காகவே மழை வந்தா வெளிய வரக்கூடாதுன்னு ஒரு ரூல் கொண்டு வந்தோம்... ஆனா.. மேடம் அதையும் மீறி நேத்து வெளிய போய்ருக்காங்க... யாருக்கூட சுத்துனாலோ தெரியல... இதுல திமிரா வேற பதில் சொல்றா.... " என அவர் குற்ற பத்திரிகை வாசிக்க துவங்கினார்

ஏஞ்சல் தலை குனிந்தபடி சுவிங்கத்தை மென்று கொண்டு தலையை ஆட்டி அவரை போல செய்ய அதில் கடுப்பாகி போனார் சைலஜா.

" இந்த மாதிரி ஒரு மோசமான பொண்ண நான் என் வாழ்க்கையில பார்த்ததே இல்ல.. " என்று அந்த வார்டன் ஆத்திர மிகுதியில் கூறி விட்டார்.

" இங்க பாருங்க மிஸ். சைலஜா... பேசின வரை போதும். இனி இங்க அவளை விட்டுட்டு போற அளவு நான் முட்டாள் இல்ல.. என் கண்ணு முன்னாடியே இப்டி பேசுறீங்க... இனி அவள் இங்க இருக்க மாட்டாள்... " என்று அவரிடம் ஆவேசமாக கூறி விட்டு ஏஞ்சலின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் மேரி, ஏஞ்சலின் கார்டியன்.

****

வெங்காயத்தை நறுக்கியபடி பிதற்றினாள் மேரி...

" அவளுக்கென அவ்ளோ தைரியம்.... என் ஏஞ்சல பாத்து அப்படி சொல்லிட்டால்ல... " என்றவளின் கோபம் வெங்காயத்தை நறுக்கும் விதத்திலேயே தெரிந்தது.

" என் ஏஞ்சல பாத்து அப்டி சொல்லிட்டால்ல... " மீண்டும் துவங்க...

அங்கிருந்த கூடை ஒன்றில் காரட் ஒன்றை எடுத்து சுவைத்தவள்...

" அடியேய்... அவங்க ஒரு முறை தான் சொன்னாங்க... நீ இத்தனை முறை சொல்லிட்டு இருக்க... " ஏஞ்சல் எகிற

அவள் கையில் ஒரு பெல்ட் போன்ற
ஒன்றை வைத்து விட்டு சமைக்க சென்றாள் அவள்.

அது அந்த நாய் தன் கழுத்தில் அணிந்திருந்த பெல்ட் போல இருந்தது. அதை ஏஞ்சல் இப்போதே பார்க்கிறாள். ப்ரவுன் நிற லெதர் கழுத்துப்பட்டையில் தங்க நிறத்தில் " V " என்ற எழுத்து மின்னியது...

" இதென்ன V....???? " என்று குழப்பத்துடன் பார்த்தவள் நன்றாக உறங்கி கொண்டிருந்த அந்த குட்டியை ஒரு முறை ஏறிட்டாள்.
 
உங்களுடைய "அழைப்பாயா"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ருத்ரா விக்ரம் டியர்
 
உங்களுடைய "அழைப்பாயா"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ருத்ரா விக்ரம் டியர்
உங்க வார்த்தைகள் மிகுந்த உற்சாகத்தை தருது... ரொம்ப நன்றி ???
 
Top