Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 19 1

Advertisement

Admin

Admin
Member


பகுதி – 19


வியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கே ஹரியின் குடும்பம் காரில் சென்னையை நோக்கி கிளம்பி விட்டனர். மீனா தான் ஹரி பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாள். அனி பின்னாடி நின்று கொண்டு இருவரிடம் பேசிக்கொண்டு வந்தாள்.

காலை உணவை வழியில் ஒரு ஹோட்டலில் முடித்துக்கொண்டனர். அதன் பிறகு அனி பின்னால் படுத்து உறங்கி விட.... காரில் மெலிதாகப் பாடலை ஒலிக்கவிட்டபடி ஹரியும் மீனாவும் பேசிக்கொண்டு வந்தனர்.

“நீ புடவையில ரொம்ப அழகா இருக்க மீனா.... எனக்கு உன்னைப் பார்த்திட்டே இருக்கணும் போல இருக்கு.... கார் ஓட்டிட்டு உன்னைப் பார்க்க கஷ்டமா இருக்கு.... நீ கார் ஓட்டுறியா...”

ஹரி கேட்க மீனா அவனை முறைத்தாள். ஹரிணியின் வீட்டில் மாமனார் மாமியார் இருப்பதால் புடவை அணிந்து வைஷ்ணவி வாங்கி வந்திருந்த சில நகைகளை மட்டும் அணிந்து வந்திருந்தாள்.

“உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் என்னைப் பார்த்தா எப்படி இருக்கு? அவ பைக் கூட ஓட்ட தெரியாதான்னு கேட்கிறா... நீங்க காரா....அதுவும் உங்க பொண்ணுக்கு இருக்கக் கொழுப்பு இருக்கே....”

“சின்னக் குழந்தை அவளை எதுக்குத் திட்ற? ஆனா அன்னைக்கு அனி உன்னைப் பார்த்து கேட்டதை நினைச்சா.... எனக்கு இப்ப கூடச் சிரிப்பா வருது.”

சொல்லிவிட்டு ஹரி வாய்விட்டு சிரிக்க.... அவன் கையில் நறுக்கெனக் கிள்ளிய மீனா “ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க. என்னைப் பார்த்து அப்புறம் சிரிக்கலாம்.” என்றாள்.

இருவரும் பேசி கலாட்டா செய்தபடி சென்றதால்....பயணத்தால் எந்த அலுப்பும் தெரியாமல் முன் மதிய நேரமே ஹரிணியின் வீட்டை சென்று அடைந்தனர்.

ஹரிணி செல்லும் வழியிலேயே பல முறை அழைத்து “எங்க இருக்கீங்க?” எனக் கேட்டுக்கொண்டு இருந்ததால்.... இவர்கள் கார் சென்று வாசலில் நின்றதும், வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றாள்.

இவர்கள் சென்ற நேரம் வீட்டில் பெண்கள் மட்டும் தான் இருந்தனர். விக்ரம் இன்னும் கடையில் இருந்து வந்திருக்கவில்லை.... ஹரிணி அவர்களுக்கு வீட்டிலேயே செய்த பழரசம் கொண்டு வந்து கொடுக்க.... அதைப் பருகியபடி பேசிக்கொண்டு இருந்தனர்.

இவர்கள் வந்த சிறிது நேரத்திலேயே விக்ரம் வந்து விட்டான்.

“வாங்க... வாங்க நீங்க வரும் போது வீட்ல இருக்க முடியலை....” என்றவன், மீனாவை பார்த்து “எப்படி இருக்க மா?” எனக் கேட்டதும்,

“நல்லா இருக்கேன் அண்ணா...” என்றாள் அவள் பதிலுக்கு.... “அனி குட்டி மாமா கிட்ட வாங்க...” என விக்ரம் அனியை தூக்கி வைத்து அவளைக் கொஞ்சி கொண்டு இருந்தான்.

“என்னவோ ஹரியோட சொந்த பொண்ணு மாதிரி இந்தக் கொஞ்சு கொஞ்சறான்.... அவளோட பொண்ணு தானே...” என நினைத்த விக்ரமின் அம்மா... மீனாவையே ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தார்.

அவர் அவர்கள் வந்தலில் இருந்தே அப்படித்தான் மீனாவை பார்க்கிறார். அவருக்கு ஏனோ இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை....

“உங்க அண்ணனுக்கு நீங்க முன்னாடி கல்யாணம் ஆகாத பெண்ணே பார்த்திருக்கலாம். எதுக்கு இப்படிக் குழந்தையோட இருக்கிற பொண்ணு...” என ஹரிணியிடமும் சொல்லி இருக்கிறார்.

அனியால் தானே இந்தத் திருமணமே ஆனால் ஹரிணி அதையெல்லாம் அவரிடம் சொன்னது இல்லை... சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்.

“அண்ணாவுக்கு அவங்களைத் தான் பிடிச்சிருந்தது. அதனால கல்யாணம் செஞ்சு வச்சிட்டோம்.” என்று மட்டும் தான் சொல்லி இருந்தாள்.

மாமியார் மீனாவை ஒரு மாதிரி பார்ப்பதை கவனித்தவள் “அண்ணி வாங்க ரூமுக்கு போகலாம்.” என உள்ளே அழைத்து வந்துவிட்டாள். ஹாலில் விக்ரமும் ஹரியும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.



அனி, அத்வி, சின்ன ஹரி மற்றும் விக்ரமின் தம்பி மகள் எல்லோரும் சேர்ந்து வெளி வராண்டாவில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்த ஹரிணியின் மாமியார் அனியை அழைத்து “உங்க அப்பா பேர் என்ன?” என்றதும்,

அவள் அழகாக “ஹரிஹரன்.” என்றாள்.

பாரு என்னவோ ஹரிக்கு பொறந்த மாதிரி அழுத்தி அவன் பேரை சொல்லுது என்று நினைத்தவர் “இல்ல முன்னாடி உன் அப்பா யாரு?” என்றதும், அனிக்கு ஒன்றுமே புரியவில்லை....

முன்னாடியா.... என யோசித்தவள் “ஹரி... தான்.” என்றாள். தந்தை என்ற உறவையே ஹரியிடம் தான் முதலில் அனி தெரிந்து கொண்டாள். அப்படி இருக்க... அவளுக்கு எப்படி ஆகாஷ் பற்றித் தெரியும்?

இது தெரியாத ஹரிணியின் மாமியார், அவளை மேலும் கேள்வி கேட்க நினைக்கும் போதே விக்ரமின் “அம்மா...” என்ற அழுத்தமான அழைப்பு அவரின் வாயை இறுக மூட வைத்தது.

ஐயோ ! இவன் என்னென்ன கேட்டானோ தெரியலையே..... எனப் பயந்து கொண்டே அவர் திரும்பி பார்க்க... விக்ரமோடு ஹரியும் இருந்தான். அவன் முகத்தில் இருந்தே அவனும் இவர் பேசியதை கேட்டுவிட்டான் என அவர் புரிந்து கொண்டார்.

ஹரி அனியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டான்.

“நீங்க தானே பா என்னோட அப்பா...அப்புறம் ஏன் அந்தப் பாட்டி திரும்பத் திரும்ப அப்பா யாருன்னு கேட்கிறாங்க?”

“நான் தான் டா உன்னோட அப்பா.... அவங்க சும்மா நீ கரெக்டா சொல்றியான்னு பார்த்தாங்க.” அனி கேட்டதற்கு ஹரி எதோ சொல்லி சமாளித்தான்.

“உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா மா.... சின்னக் குழந்தைகிட்ட போய் இப்படியே பேசுவீங்க.” என எரிந்து விழுந்துவிட்டு விக்ரம் உள்ளே சென்றான்.

அங்கே ஹரிணியும் மீனாவும் இருந்த அறைக்கு வந்த ஹரி “ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க? எப்ப பார்த்தாலும் அப்படி என்ன அரட்டை? குழந்தைகள கூடக் கவனிக்காம....” எனக் கடிந்து கொள்ள....

ஹரிணிக்கும் மீனவுக்கும் ஒன்றும் புரியவில்லை... விளையாடும் போது குழந்தைகள் யாரும் விழுந்து விட்டார்களோ என நினைத்து “என்னங்க ஆச்சு?” என மீனா கேட்க... ஹரி பதில் சொல்லாமல் இருந்தான்.

அங்கே வந்த விக்ரம் “சாப்பாடு எடுத்து வை...” என்றதும், ஹரிணி அங்கிருந்து செல்ல... மீனாவும் அவளோடு சென்றாள்.

இவர்கள் சாப்பிட சென்ற போது... ஹரிணியின் மாமியார் அவர் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டார்.

ஹரிணி தன் அண்ணன் குடும்பத்திற்காக நிறைய வித விதமாகச் சமைத்து இருந்தாள். முதலில் கோபமாக இருந்ததால் ஹரி பேருக்கு தான் உணவை கொறித்தான்.

“அண்ணா... உனக்குச் சாப்பாடு பிடிக்கலையா...” ஹரிணி மீண்டும் மீண்டும் கேட்க.... தங்கைக்காகக் கோபத்தை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தவன் “நல்லா இருக்கு, நீயும் உட்கார்ந்து சாப்பிடு.... அப்ப தான் நாம சீக்கிரம் கிளம்பலாம்.” என்றான்.

மீனாவுக்கு அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று ஒன்றும் புரியவில்லை.... அவள் ஒழுங்காகச் சாப்பிட்டாள். அனிக்கு ஹரியே தட்டில் அவள் சாப்பிடும் வகையில் உணவை பிரித்து வைக்க... அவளே சாப்பிட்டாள்.

சாப்பிட்டு முடித்ததும் ஹரி அவர்களை உட்காரவே விடவில்லை.... “ஹரிணி, எல்லாம் எடுத்து வச்சிட்டியா... நீ பெங்களூர் கொண்டு வர பாக் கொடு கார்ல வச்சிடலாம்.” என அவள் பையை வாங்கிக்கொண்டு சென்று அவன் காரில் வைத்து விட்டு வந்தான்.

ரெசார்ட் போவதால் மீனா சுடிதார் மாற்றிக்கொண்டாள். நகைகளையும் கழட்டி பையில் பத்திரபடுத்தினாள். இவர்கள் கிளம்பி கொண்டிருந்த போது... விக்ரமின் அப்பாவும் வந்து விட அவரிடம் பேசிவிட்டு உடனே கிளம்பி விட்டனர்.

விக்ரம் அவனின் காரை எடுத்துக்கொண்டு வந்தான். அதில் அவனும் ஹரிணியும் மட்டும் வர.... குழந்தைகள் எல்லோரும் ஹரியின் காரில் ஏறிக் கொண்டனர்.

செல்லும் வழியில் விக்ரம் ஹரிணியிடம் தன் அம்மா அனியிடம் பேசியதை சொல்ல.... இப்படி எதவும் ஆகிவிடக்கூடாது என்று தான் அவள் மீனாவை தன்னுடனே வைத்துக்கொண்டு இருந்தாள். ஆனால் சின்னக் குழந்தையிடம் தன் மாமியார் இப்படி நடந்து கொள்வார் என அவளுக்கு எப்படித் தெரியும்?

மஹாபலிபுரம் பக்கத்தில் இருந்த அரசுக்கு சொந்தமான கடற்கரை ரெசார்ட் சென்றனர். அங்கே இரண்டு அறைகள் பதிவு செய்து கொண்டு தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு வந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு உடனே நீச்சல் குலத்திற்கும் கிளம்பிவிட்டனர்.

குழந்தைகளுக்கு நீச்சல் உடைகளை அணிவித்து விக்ரமும் ஹரியும் உடை மாற்றியதும் நீச்சல் குளம் நோக்கி சென்றனர். செல்லும் வழியில் மற்றவர்கள் முன்னே செல்ல ஹரிணி பின்தங்கி நடக்க... ஹரி அவளோடு இணைந்து நடந்தான்.

“என் மாமியார் பேசினதுக்குச் சாரி அண்ணா...”

ஹரிணி பேசினதுக்கு ஹரி எந்தப் பதிலும் சொல்லவில்லை.... அமைதியாக நடந்தான்.

“அவங்க என்கிட்டே மீனா, அனியை பத்தி கேட்பாங்க. நான் எதுவும் சொல்லலையா... அது தான் அனி கிட்ட அப்படிக் கேட்டுட்டாங்க. நீ எதுவும் மனசுல வச்சுக்காத....”

“அவங்க உன் மாமியாருன்னு தான் சும்மா விட்டேன். அவ சின்னக் குழந்தை அவகிட்ட போய் இப்படிக் கேட்கிறாங்க. அவ என்கிட்டே நீங்க தானே பா என்னோட அப்பான்னு கேட்கிறா....”

“அவளுக்கு இப்ப புரியாத விஷயம் எல்லாம் இன்னும் ரெண்டு வருஷம் போனா... நல்லா புரிய ஆரம்பிக்கும். என் பொண்ணு எதை எதை நினைச்சுக் கஷ்டப்படப் போறாளோ....”

ஹரியின் வேதனை ஹரிணிக்கும் புரிந்ததால்... அவள் அமைதியாக வர “சரி விடு, அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்.” என ஹரியும் அதோடு அந்தப் பேச்சை விட்டுவிட்டான்.

அங்கே அனியோடு முன்னே சென்ற மீனா “அங்க அத்தை வீட்ல என்ன டி பண்ணி வச்ச? உங்க அப்பா கோபமா இருந்தாரு...” எனக் கேட்டதும், அனி அங்கே நடந்ததைச் சொல்லி விட்டாள்.

இந்த மாதிரி பேச்சுக்கள் மீனாவுக்குப் புதிது இல்லை.... எவ்வளவோ பேர் அனியின் அப்பாவை பற்றித் தெரிந்து கொள்ள... எப்படி எப்படியோ அவளிடமும் கேட்டு பார்த்து இருக்கிறார்கள்.
ஒரு பெண் கணவனைப் பிரிந்து இருக்கிறாள் என்றால்... இந்தச் சமுகம் அந்தப் பெண்ணைத் தான் தவறாக நினைக்கும்.

இதில் மட்டுமில்லை எதிலும் அப்படித்தான். ஆண்கள் குற்றம் செய்தால் கூட... அதற்குப் பெண் தான் காரணம் என்று பழியை இந்தச் சமுதாயம் எளிதாகப் பெண்ணின் மீது சுமத்தி விடும்.



குழந்தையோடு இருக்கும் ஆண்களின் மறு திருமணத்தை ஆதரிக்கும் சமுதாயம். அதே ஒரு பெண் இரண்டாம் திருமணம் செய்து கொண்டால்... அவளை மட்டும் விநோதமாகப் பார்க்கும். இங்கே ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயம் வேறு என்ன சொல்ல?

நீச்சல் குளத்தில் மீனாவை தவிர மற்ற அனைவரும் இரங்கி விளையாட... மீனா தண்ணீரில் கால்களை மட்டும் விட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தாள். அவளுக்குத் தண்ணீர் என்றால் பயம்.

குழந்தைகள் ஆழம் இல்லாத பகுதியில் பந்தை வைத்துத் தண்ணீரில் விளையாடிக்கொண்டு இருக்க... ஹரியும் விக்ரமும் ஆழமான இடத்தில் நீச்சல் அடித்துக்கொண்டு இருந்தனர். மீனாவும் அந்தப் பக்கம் தான் உட்கார்ந்து இருந்தாள்.

வைஷ்ணவி ஹரிணியிடம் ஹரி மீனாவை பற்றி நிறையவே புலம்பி இருந்ததால்... இவர்களை இப்படியே விடக்கூடாது என நினைத்தவள், விக்ரமை அழைத்தாள்.

அவன் வந்ததும் அவனிடம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மெதுவாக மேலே ஏறினாள்.

மீனா அவளைக் கவனிக்கவில்லை... அவள் எதோ செய்யப் போகிறாள் என விக்ரமுக்கு நன்றாகவே புரிந்தது. அவன் முறுவலுடன் தன் மனைவியையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

மீனாவின் பின் பக்கம் வந்து நின்றவள் “டேய் அண்ணா... இந்தா உன் பொண்டாட்டிய பிடிச்சிக்கோ...” என்றபடி மீனாவை ஒரே தள்ளில் தண்ணீரில் தள்ளி இருந்தாள்.

 
:love: :love: :love:

ஹரிணியோட மாமியார் எல்லாம் என்ன ஜென்மமோ... :mad:
சின்ன குழந்தைக்கிட்ட இப்படியா கேக்குறது...

ஹரிணி மீனாவை தண்ணீர்குள்ள தள்ளி விட்டாச்சு... இ‌னி அடுத்து என்ன???
 
Last edited:
பையன் விக்ரம்மிடம் அவ்வளவு பயம் இருக்கிற ஹரிணியோட மாமியார் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்
 
Last edited:
Top