Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 13 1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 13

மீனாவுக்கு நாட்கள் வெகு அழகாகச் சென்றது. எல்லாவற்றையும் ரசித்து அனுபவித்தாள். இதற்கு முன் வாழ்க்கையே போராட்டமாகத் தான் அவளுக்கு இருந்திருக்கிறது. அனியை நல்லபடியாக ஆளாக்கி விட வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடிக்கொண்டே இருந்தாள். இதில் பெரிதாக எதையும் அனுபவிக்கோ , நின்று ரசிக்கவோ அவளுக்கு நேரம் இருந்தது இல்லை.

இப்போது அப்படி இல்லை.... அனியின் பொறுப்பை ஹரி ஏற்றுக்கொண்டதும், மனதில் எப்போதும் இருக்கும் பயம் இல்லாமல் இயல்பாக இருக்க முடிந்தது.

சில நேரம் நாம் நன்றாகச் சந்தோஷமாக இருக்கிறோம். ஆனால் ஹரி.... அவன் அனிக்காக அல்லவா இந்தத் திருமணதிற்கு ஒத்துக்கொண்டான். அவனைத் தானும் அனியும் கஷ்டபடுத்துகிறோமோ என எண்ணி கலங்கவும் செய்வாள்....

ஆனால் அது அனி, ஹரியை காணும் வரை தான். இருவரையும் பார்க்கும் போது... அந்த எண்ணமே தவறு என்பது போல் தோன்றும். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் அவர்களின் அன்பு அதிகரித்துக்கொண்டே சென்றது.

அனிக்குப் புதுச் சைக்கிள் வாங்கி அதை அவளுக்கு ஓட்ட ஹரி தான் சொல்லிக்கொடுத்தான். மகள் ஓட்ட அவள் பின்னே அவன் ஓடி வருவது பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

இவ்வளவு பெரிய ஆண் மகன் சிறுவன் போல்... ஓடுவது மகளுக்காக அல்லவா.... தாய் என்ன தான் பிள்ளைகளைக் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டலும், சில விஷயங்கள் தந்தைகள் செய்யும் போது தான் அழகாக இருக்கும்.

அப்படித்தான் ஒருநாள் அனி பிசா கேட்க... மீனா எனக்குச் செய்யத் தெரியாது எனச் சொல்லிவிட்டாள். ஹரி அன்று மதியம் வரும் போதே.... என்னவோ வாங்கி வந்தவன், சாப்பிடாமல் நேராகச் சென்று சமையல் அறையில் எதோ செய்தான்.
ஹரி அவனே போட்டு சாப்பிடுவதால்... மீனா அவனுக்கு உணவை மேஜையில் வைத்து விட்டு அறைக்குள் வந்து விடுவாள். அன்றும் அது போல் வந்துவிட்டாள். ஆனால் உள்ளிருந்து அவன் சாப்பிடுகிறானா எனப் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

ஹரி எதோ சமையல் அறையில் உருட்டுவது தெரிந்தது. ஆனால் என்ன செய்கிறான் என்று போய்ப் பார்க்க ஒருமாதிரி இருந்தது. அனியும் விடுமுறை முடிந்து புதுப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து இருந்தாள். அதனால் அவளும் வீட்டில் இல்லை.

ஒருவேளை தன் சமையல் பிடிக்கவில்லையோ.... அவனே எதோ செய்து சாப்பிடுகிறானோ.... என நினைத்துக் கலக்கமாக வேறு இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் வெளியே வந்தவன், உணவு மேஜையில் அமர்ந்து மீனா சமைத்ததைத் தான் போட்டு சாப்பிட்டான்.

பிறகு மீண்டும் சமையல் அறையில் புகுந்து கொண்டான். என்னவோ செய்யட்டும் என மீனா படுத்து உறங்கிவிட.... மாலை பள்ளியில் இருந்து வந்த அனி “அம்மா பிசா மா.... அப்பாவே செஞ்சிருக்காங்க. சூப்பரா இருக்கு, வாங்க மா...” என மீனாவை எழுப்பி இழுத்துக்கொண்டு செல்ல... அங்கே உண்மையிலேயே மேஜையின் மீது பிசா இருந்தது.

இது தான் இவ்வளவு நேரமா செஞ்சாங்களா.... பரவாயில்லையே நல்லா வந்திருக்கே.... என மீனா நினைக்கும் போதே “சூடா இருக்கும் போதே சாப்டுடுங்க, அப்புறம் சாப்பிட வருமோ தெரியலை...” ஹரி முறுவலுடன் சொல்ல.... மீனா உட்கார்ந்து சாப்பிட்டாள்.

கோதுமை மாவில் செய்தது போல... கொஞ்சம் கடினமாக இருந்தாலும் சுவை நன்றாகவே இருந்தது. அனி ஒரு வாய் உண்பதும் “ரொம்ப நல்லா இருக்கு பா....” எனச் சொல்வதுமாக இருந்தாள்.

அனி மெதுவாகச் சாப்பிடுவதால்... ஹரி அவள் சாப்பிட சாப்பிட சூடு செய்து கொடுத்தான். ஏற்கனவே அப்பா பைத்தியம் இனி கேட்கவும் வேண்டுமா... தனக்காக மெனக்கெட்டுப் பிசா செய்த அப்பா ஹீரோவாகிப் போக.... வைஷ்ணவி ஹரிணி எல்லோருக்கும் அழைத்து “எங்க அப்பா எனக்குப் பிசா செஞ்சு கொடுத்தாங்க.” எனப் பெருமை பீற்றினாள்.

அனி சொன்னதைக் கேட்ட அத்வி அங்கே விக்ரமிடம் பிசா கேட்க.... “அது எப்படி டி உங்க அண்ணனுக்கு மட்டும் யாரை எப்படிக் கவுக்கனும்னு தெரிஞ்சிருக்கு.... எப்படியோ எல்லோரையும் அவனையே சுத்தி வர மாதிரி செஞ்சிடுறான்.” விக்ரம் சொல்ல....

“எப்பவும் வேலை வேலைன்னு ஓடாம கொஞ்சம் குடும்பத்தையும் கவனிக்கணும்.” என்றாள் ஹரிணி.

“உங்க அண்ணன் என்னமா உட்கார்ந்த இடத்தில இருந்து சம்பாதிக்கிறான். எனக்கு அப்படியா....”

வாயில் வந்த காரணத்தைச் சொல்லிவிட்டு விக்ரம் அங்கிருந்து நழுவிவிட்டான். இதுவரை அதிகம் சம்பாதிச்சு என்ன செய்யப்போறோம் என்று இருந்த ஹரி, அனி வந்ததும், மகளுக்காக இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடையை விரிவு படுத்திக்கொண்டு தான் இருந்தான்.

அனியை வளர்ப்பு மகள் போலில்லாமல் சொந்த மகள் போலவே நடத்தும் ஹரியின் பண்பு மீனாவை வியக்கவே வைத்தது. அவளுமே ஹரிக்கு ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து தான் செய்வாள். வைஷ்ணவியிடம் அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று கேட்டு தான் செய்வாள்.

ஆனால் அது மனைவி என்ற உரிமையில் அல்ல.... தன் மகளை அவன் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் போது.... நாமும் அந்த நன்றியை சிறிதளவாவது காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

இப்படியே சில நாட்கள் செல்ல வைஷ்ணவி அவர்களை ஊட்டிக்கு வரும்படி அழைத்துக்கொண்டே இருந்தார். அந்த வாரம் வெள்ளிக்கிழமை அனிக்கும் பள்ளி விடுமுறை என்பதால்.... அந்த நாளோடு வார விடுமுறையையும் சேர்த்து மூன்று நாட்கள் ஊட்டி செல்லலாம் என்றான் ஹரி.

அனிக்கு தொலைத் தூர முதல் பயணம், அதனால் மிகவும் உற்சாகமாக இருந்தாள். வியாழன் இரவு பேருந்தில் ஹரி முன் பதிவு செய்திருந்தான்.

அனியும் மீனாவும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொள்ள.... நடுவில் பாதை... அதற்கு அடுத்து இருந்த இருக்கையில் ஹரி உட்கார்ந்து இருந்தான். வீட்டிலேயே இரவு உணவு முடித்திருந்ததால்.... அனி பஸ் கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் உறங்க ஆரம்பித்தாள்.



மீனா ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள். அப்போது அவள் காலை யாரோ தொடுவது போல் இருந்தது. முதல் முறை மாமியார் வீட்டிற்குச் செல்வதால்.... புடவை தான் அணிந்து இருந்தாள்.

பின்னாடி திரும்பி பார்க்க.... அங்கே இருவர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவன் உறங்கி கொண்டு இருந்தான். அவன் கால் தான் தெரியாமல் பட்டு விட்டதோ என எண்ணி மீனா காலை நன்றாகத் தள்ளி வைத்துக்கொள்ள.... சிறிது நேரத்தில் மீண்டும் அவள் காலை யாரோ வருடினார்கள்.

மீனா திரும்பி பார்க்க அவன் அப்போதும் உறங்கி கொண்டு இருந்தான். பக்கத்தில் இருந்தவர் மீனாவிடம் என்னவென்று கேட்க.... “கால் மேல படுது.” என்றதும், அவர் பக்கத்தில் உறங்கி கொண்டு இருந்தவனை எழுப்பி “கால் அவங்க மேல படுதாங்க ஒழுங்கா உட்காருங்க.” என்றதும், அந்த ஆள் கண்டுகொள்ளாமல் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

அதற்குள் ஹரி எழுந்து வந்து என்னவென்று கேட்க... “கால் மேல படுற மாதிரி இருக்கு.” என்றாள் மீனா. ஹரி உறங்கி கொண்டு இருந்தவனைத் தட்டி எழுப்ப ஆரம்பித்தான். லேசாக இல்லை பலமாக... அவன் தட்டுவதே எதோ அடிப்பது போல இருந்தது. அதைப் பார்த்து மீனாவுக்குப் பயமாகப் போய்விட்டது.

“வேண்டாம் விட்ருங்க....” அவள் சொல்லச் சொல்ல.... ஹரி காதிலேயே வாங்காமல் அவனை எழுப்புவதிலேயே குறியாக இருந்தான்.

உண்மையில் உறங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் உறங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியுமா.... அவன் எழுந்து கொள்ளாமல் உறங்குவது போலவே இருக்க.... இந்த அமளியில் நடத்துனரும் அங்கே வந்து விசாரித்தார்.

ஹரி அவரிடம் நடந்ததைச் சொல்ல.... அவரும் அவனைத் தட்டி எழுப்ப.... அவன் ஒருமுறை கண் திறந்து பார்த்து விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான். அவன் மீது இருந்து மதுவின் நாற்றம் வேறு அடித்தது.

“இன்னொரு முறை உன் காலு இந்தப் பக்கம் வரட்டும். உன் காலை ஓடிக்கிறேன்னா இல்லையா பாரு...” எனச் சத்தமாக மிரட்டிவிட்டு தூங்கி கொண்டிருந்த அனியை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு மீனாவின் பக்கத்திலேயே ஹரி உட்கார்ந்து விட்டான். அந்தப் பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் இவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மூன்று நாட்கள் மட்டுமே செல்வதால் காரை எடுத்துக்கொண்டு வரவில்லை.... அதோடு இரவு நேரம் காரில் செல்வது பாதுகாப்பு இல்லை. பகலில் சென்றால் பயணத்திலேயே பாதி நேரம் சென்று விடும். ஹரிக்கு காரிலேயே சென்றிருக்கலாமோ என இப்போது தோன்றியது.

அவன் கோபத்தோடு உட்கார்ந்திருந்தான். ஆனால் அப்போதும் அந்த ஜன்மம் பயப்படவில்லை.... மீண்டும் காலை விட்டான். மீனா வெறுத்தே போய் விட்டாள். இதை ஹரியிடம் சொன்னால்... அவன் கோபத்தில் அவனை அடித்தே விடுவான் என்று தெரியும். அவன் வேறு போதையில் இருக்கிறான். அவன் பதிலுக்கு ஹரியை எதாவது செய்து விட்டால், அந்தப் பயத்தில் மீனா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

சீட்டில் காலை மடித்து வைத்துக்கொண்டவள், அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டாள். அவன் திடிரென்று எழுந்து ஹரியை எதாவது செய்து விடுவானோ என அவளுக்குப் பயம். இந்தப் பயணம் எப்போது முடியும் என்பது போல் இருந்தாள்.

திடிரென்று எழுந்த ஹரி நடத்துனரிடம் சென்று எதோ பேசிவிட்டு வந்தான். அவர் வந்து சத்தமாக “வண்டி போலீஸ் ஸ்டேஷன் போகுது, அதனால ஒரு அரை மணி நேரம் எல்லோரும் பொறுத்துக்கணும்.” என்றதும், பஸ்சில் ஆளாளுக்குப் பேசிக்கொள்ள....

தூங்குபவன் போல் நடித்தவன் அப்போது தான் எழுந்து கொண்டது போல் பாசாங்கு செய்துவிட்டு, தான் கொண்டு வந்த பையை எடுத்துக்கொண்டு ஓட்டுனரிடம் சென்று எதோ சொல்ல... அவர் வண்டியை நிறுத்தியதும் இரங்கி சென்றுவிட்டான்.

அவனைப் பஸ்சை விட்டு இறங்க வைக்கத் தான் ஹரி அவ்வாறு செய்திருந்தான். அவன் இறங்கியதும் தான் மீனாவுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

“இனியாவது நிம்மதியா தூங்குங்க....” என்ற ஹரி அவன் சீட்டிற்குப் பக்கத்தில் இருந்தவரை பின்னால் உட்கார சொல்லிவிட்டு, அவன் அனியோடு சென்று மறுபக்கம் அமர்ந்து கொண்டான். மீனா வசதியாகக் கால் நீட்டி படுத்துக்கொண்டு வந்தாள். ஹரி அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டே வந்தான்.

மீனா மனதில் அப்படி ஒரு அமைதி. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணமே நிம்மதியான உறக்கத்தைத் தந்தது.

பாதுகாப்பை உணரும் ஆண்னிடம் பெண் மனம் படர்ந்து விடுவது இயல்பு. பணம் அழகு எல்லாம் அதற்குப் பிறகு தான். அதே போல்... தன்னவளை பாதுகாக்க வேண்டும் என்று தான் ஆணின் மனம் நினைக்கும்.

 
:love: :love: :love:

Nice update

எல்லாரையும் கவுக்க தெரிஞ்சு
வச்சுருக்கிற ஹரி, மீனாவை எப்ப
எப்பிடிடா கவுக்க போற???

Waiting for that....
 
Last edited:
:love::love::love:

சைக்கிள் பீட்ஸா.......... பொண்ணுக்கு.......
அம்மாக்கு பாதுகாப்பு..... secured feeling கொடுத்தாச்சு மீனாக்கு.......
அது மட்டும் போதுமா வாழ்க்கைக்கு.......
அம்மா விவகாரமான ஆள்.......
என்ன பிளான் வச்சிருக்காங்கனு பார்க்கலாம்......

விக்ரம் :love: உன்னை கடுப்பேத்துறதையே வேலையா வச்சிருக்கான் மச்சான் :p
 
Last edited:
Top