Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
பூ 3:

அன்று மாலை தொழில் முறைக் கூட்டம் மற்றும் ஒரு விருந்து ஏற்பாடாகியிருந்தது.அதில் கலந்து கொள்வதற்காக, அலுவலகத்தில் இருந்து நேரத்திற்கே கிளம்பியிருந்தான் விஜய். அவனுடன் வருவதாய் சொன்ன பிரவீன் இன்னும் வந்தபாடில்லை.

“என்ன ரஞ்சன்..? பிரவீன் வந்தாச்சா..?” என்றான்.

“இன்னும் இல்லை சார்...!”

“இன்னும் என்ன பண்றான். டைம் ஆச்சு..!” என்றான்.

விஜய்யின் கார் நண்பனின் வருகைக்காக, அவர்கள் கம்பெனி வாசலில் நின்றிருந்தது. அதாவது விஷ்வ துளசியின் அலுவலகத்தின் முன்பு. சென்னையில் இருந்து வந்த பிரவீன், நேராக அங்கு வந்து விட்டான்.

விஜய் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, சிரித்த முகத்துடன் வந்தான் பிரவீன்.

“ஹாய் விஜய்..!” என்றபடி அவன் காரில் ஏற, அவனைப் பார்த்து முறைத்தான் விஜய்.

“எவ்வளவு நேரம் வெயிட் பண்றது பிரவீன்..?” என்று விஜய் சிடுசிடுக்க,

“சாரி மாப்பிள்ளை...! ஒரு முக்கியமான பைல். அதை விஷ்வாகிட்ட குடுத்துட்டு வர லேட் ஆகிடுச்சு...!” என்றான்.

“வீட்டுக்கு போனியா இல்லையா..?” என்றான் விஜய்.

“எங்க...? நேரா இங்க தான் வந்தேன். மீட்டிங்க முடிச்சுட்டு வீட்டுக்கு போய்க்கலாம்ன்னு இருந்துட்டேன்..!” என்றான் பிரவீன்.

ரஞ்சன் இவர்கள் இருவரையும் வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களின் பிணைப்பு அப்படி. எவ்வளவு பிரச்சனைகள் நடந்தாலும், இன்று வரை இவர்கள் மட்டும் பிரியவேயில்லை. துளசியிடம் ஒரு நாள் கூட விஜய்யை விட்டுக் கொடுத்து பேசியது இல்லை. அதே போல் விஜய்யிடம்,துளசியையும் விட்டுக் கொடுத்துப் பேசியதில்லை. பிரவீன் சிறந்த அண்ணன், அதே சமயம் நல்ல நண்பன்.

“அப்பறம் உன்னோட பிராஜெக்ட் என்ன ஆச்சு..?” என்றான் பிரவீன்.

“சார் ஒரு விஷயத்தைத் தொட்டாலே அது சக்சஸ் தான். அதே மாதிரி தான் இன்னைக்கும் நடந்தது. சக்சஸ்..” என்று ரஞ்சன் முந்திக் கொண்டு சொல்ல, அவனை முறைத்தான் விஜய்.

“சென்னைக்கு போன விஷயம் என்ன ஆச்சு..?” என்றான் விஜய் முகத்தை சீரியசாய் வைத்துக் கொண்டு.

“எங்க...? இப்ப முடியும்ன்னு தோணலை..! பார்ப்போம்..” என்று மழுப்பினான் பிரவீன்.அதற்குள் அவர்கள் செல்ல வேண்டிய இடமும் வந்து விட, விஜய்யும் அப்போதைக்கு அந்த பேச்சை விட்டான்.

அந்த கூட்டத்தில் பலதரப்பட்ட தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கியவர்களும் இருக்க, விஜய்யை மட்டும் சில கண்கள் உற்று நோக்கிக் கொண்டிருந்தன.

கருப்பு நிற ஷிவான் புடவையில் ஒயிலாக வந்து கொண்டிருந்தாள் திவ்யா. அவளுடன் சேர்ந்து விமலும் மிடுக்காக வந்து கொண்டிருந்தான். ஒரு நிமிடம் அனைவரும் அவளை வியந்து பார்க்க, விஜய்யின் கண்களும் ஒரு நிமிடம் அவளைப் பார்த்து மீண்டது.ஆனால் பிரவீனுக்கோ, அவளை அங்கு பார்த்ததும் ஒரு சிறிய யோசனை.

விருந்து ஆரம்பமாக, திவ்யாவோ ஓரக்கண்ணால் விஜய்யை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்ப எதுக்கு அவனையேப் பார்த்துட்டு இருக்க...?” என்றான் விமல் கோபமாய்.

“அவன் பார்க்குற மாதிரி இருக்குறான் பார்க்குறேன். பாரு, எவ்வளவு ஹேன்ட்சம்மா...சும்மா ஜம்முன்னு இருக்கான்னு...” என்றாள், கையில் இருந்த பழரசத்தை அருந்திக் கொண்டே.

“உன்னோட போக்கு எனக்கு சரியாப் படலை திவ்யா....?” என்று எச்சரித்தான் விமல். அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.

தன்னை உற்று நோக்கும் கண்களை திரும்பாலேயே உணர்ந்து கொண்டான் விஜய். திரும்பிப் பார்க்கவும் முயற்சி செய்யவில்லை. அவன் கையில் இருந்த போனில் சற்று முன் தான் செல்பி எடுத்திருந்தான். அதில் பதிந்திருந்த அந்த இருவரையும் தான், ஜூம் செய்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“யார் இவங்க...? இவ பார்க்குற பார்வையே சரியில்லையே..?” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க,

“என்ன யோசிக்கிற விஜய்..?” என்றான் பிரவீன்.

“ஒண்ணுமில்லை பிரவீன்..!” என்பதோடு முடித்துக் கொள்ள, சுற்றி இருந்தவர்களின் கண்கள், தூரத்தை ஆவலாய் பார்க்க, நிமிர்ந்து பார்க்காமலேயே அவனுக்குத் தெரிந்தது வருவது யாரென்று.

விஷ்வ துளசி தான் சுரேஷுடன் வந்து கொண்டிருந்தாள்.அவள் சேலையெல்லாம் அணிந்து வரவில்லை. அங்கே ஆண்கள் எப்படி இருந்தனரோ அப்படியே அவளும் இருந்தாள்.கோட்,சூட் சகிதம் வந்தளைப் பார்த்து, அனைவரும் வாய் பிளந்து தான் போயினர்.

“துளசி வரேன்னு சொல்லவேயில்லையே...?” என்று பிரவீன் மனதிற்குள் யோசிக்க, விஜய்யோ அவள் நடந்து வரும் கம்பீரத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வை, அவளைப் பார்த்துக் கொண்டே, கையில் இருந்த பழரசத்தை அருந்த, அதை நிமிடத்தில் கண்டு கொண்டான் பிரவீன்.

“விஜய்..! அது என் தங்கச்சி...!” என்றான் கோபமாக.

“யார் இல்லைன்னு சொன்னா...? எனக்கு அத்தை மகன்னு கூட சொல்லலாம். சும்மா சொல்லக் கூடாது, உன் தங்கச்சி செம்ம பிகர்...என்ன..? இந்த அச்சம், மடம் இது மட்டும் தான் இல்லை..!” என்றான், எதையும் முகத்தில் காட்டாத குரலில்.

“நீ, இப்ப சொன்னது மட்டும் அவ காதுல விழுந்தது...மவனே நீ காலி..!” என்றான் பிரவீன்.

“அப்படியா...? எங்க அவளை ஒரு நிமிஷம் என் முன்னாடி நின்னு, என்னைப் பார்க்க சொல்லு பார்ப்போம்..!” என்றான் சவாலாய்.

அது மட்டும் அவளால் முடியாது. எப்போதும் அவன் முகத்தை அவள் பார்ப்பது கிடையாது. அதற்கு வெட்கம், தயக்கம் என்று அவன் நினைத்திருக்க, அதற்கான காரணம் அவனைத் தவிர அனைவரும் அறிந்த ஒரு காரணம்.அதையெல்லாம் விஜய்யிடம் சொல்லும் நிலையில் பிரவீன் இல்லை.

“என்ன விஜய்...? நீங்க ரெண்டு பேரும் எப்ப வந்திங்க..?” என்றார் சுரேஷ்.

“இப்போ தான் மாமா...ஜஸ்ட் ஹாப்னார்...”என்றான். துளசியோ அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. மிடுக்காகவே நின்றிருந்தாள்.

“இது யாரு...? இவ்வளவு திமிரா நிக்கிறா...?” என்றாள் திவ்யா யோசனையுடன்.

“அது தெரிஞ்சு என்ன செய்ய போற...?” என்று விமல் கேட்க,

“கேட்ட கேள்விக்குப் பதில்..” என்றாள்.

“அவ பேரு விஷ்வ துளசி. அவனோட அத்தை பொண்ணு. நீ பார்க்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தியே அவ தான் இவ..!” என்றான் விமல் அசட்டையாக.

“பார்க்க ஹாட் பிகராத்தான் இருக்கா..? அப்பறம் எப்படி..?” என்று அவள் ஏதே கேட்க வர, அதற்குள் ஒருவர் அவர்களின் அருகில் வந்து பேச்சுக் கொடுக்க, திவ்யாவின் பேச்சு அப்படியே நின்றது.

விஜய் மொபைலில் பேசிக்கொண்டு, அங்கிருந்து நகர, அவனைப் பார்க்காததைப் போல் பார்த்த துளசி, மனதிற்குள் கறுவினாள்.

“இவனும் இவன் மூஞ்சியும். கருவாடு மாதிரி இருக்குறவனுக்கு கோட், சூட் வேற...!” என்று கருவ,

“அவனைப் பார்த்தா..கருவாடு மாதிரியா இருக்கு..? நல்லாப் பார்த்து சொல்லு...” என்று அவளின் மனசாட்சி கிண்டல் அடித்துக் கொண்டிருந்தது.

“ஹெல்லோ மிஸ் திவ்யா..!ஹாய் மிஸ்டர் விமல்..!” என்ற சுரேஷின் குரலில் திரும்பினாள் விஷ்வ துளசி.

திவ்யா கொஞ்சம் யோசிக்க,

“நீங்க மினிஸ்டர் கனகவேல் டாட்டர் தானே...? நீங்க எப்படி இங்க...? அப்பா வரலையா..?” என்றார் வரிசையாக.

“ஹாய் அங்கிள்..டாடி கட்சி ஆபீஸ் போயிருக்கார். சோ நாங்க பார்ட்டியை அட்டென் பண்ண வந்தோம்..!” என்றவள், விமலை ஓரக்கண்ணால் பார்த்து ஜாடை செய்ய,

“ஆமா அங்கிள்..! சித்தப்பாக்கு முக்கியமான வேலை..” என்றான் சமாளிப்பாக.

“உங்களுக்கு டாடியைத் தெரியுமா...?” என்றாள் திவ்யா.

“என்னம்மா இப்படி கேட்டுட்டே...அவரைத் தெரியாதவங்க இருக்க முடியுமா..? பைதி வே...ஷீ ஸ் மை டாட்டர் விஷ்வ துளசி..!” என்று அறிமுகப்படுத்தினார் சுரேஷ்.

அதுவரை அமைதியாக இருந்த துளசி, தன்னுடைய லேசர் கண்களால் திவ்யாவை எடை போட்டாள்.

“ஹாய் துளசி..! ஐ ஆம் திவ்யா...” என்றபடி திவ்யா கையை நீட்ட, அவளை யோசனையுடன் பார்த்தபடியே கை குலுக்கினாள் துளசி.

“பெரிய இவ...வாயைத் திறந்து பேசமாட்டாளோ..” என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள் திவ்யா.

“ஓகே டாடி...! கிளம்பலாமா..?” என்றாள் துளசி.

“நீ பிரவீன் கூட போய்டுமா.எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு..!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, துளசியோ மறுப்பு சொல்வதற்குள், அவர் பிரவீனை அழைத்திருந்தார்.
 
“பிரவீன், நீ துளசியை வீட்ல டிராப் பண்ணிடு. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு..!” என்றபடி நகர்ந்துவிட்டார் சுரேஷ்.

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு துளசி. விஜய் வந்ததும் கிளம்பிடலாம்..!” என்றான்.

“அண்ணா...!எனக்கு உடனே கிளம்பனும். அவன் கூட வரதா இருந்தா, எனக்கு கேப் புக் பண்ணு” என்றாள் கோபமாய்.

“என்னது கேப்லையா...? ஏன் நான் நல்லா இருக்குறது உனக்குப் பிடிக்கலையா...? தாத்தா என்னை வச்சு செய்வார் பரவாயில்லையா...? நான் என்னோட கார்ல வரலை.விஜய் கார்ல தான் வந்தேன்.” என்றான்.

“அவனோட கார்லயா...? நெவர்..என்னால முடியாது.!” என்றாள்.

“இங்க பார்..! மூணு பேரும் ஒரே வீட்டுக்குத் தான் போறோம். இதுல ஒண்ணாப் போறதுல என்ன இருக்கு..? நீ ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறேன்னு எனக்கு சத்தியமாப் புரியலை. நான் தான் இருக்கேன்ல.நீ என் கூட தான் வரப் போற. உன்னோட அண்ணனை நம்புறதா இருந்தா வா. இல்லைன்னா உன் இஷ்ட்டம்..” என்றான் பிரவீன் கோபமாக.

பிரவீன் இப்படி அதிகம் பேசமாட்டான். அப்படி பேசுகிறான் என்றால் கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தம்.அதைப் புரிந்து துளசியும் அமைதி காத்தாள்.

ரஞ்சனை அழைத்தவன்,

“நீ கிளம்பு ரஞ்சன். கார் கீயைக் குடு.நானே டிரைவ் பண்ணிக்கிறேன்..!” என்று சொல்ல,

“சார்..! விஜய் சார்..” என்று இழுத்தான் ரஞ்சன்.

“அவனுக்கென்ன...? நாங்க போய்க்கிறோம்.. நீ கிளம்பு..!” என்றான்.

“ஓகே சார்..!” என்றான் தயக்கத்துடன்.

கீயைத் துளசியிடம் கொடுத்தவன்,”நீ கார்ல வெயிட் பண்ணு. நான் அவனைக் கூட்டிட்டு வரேன்..!” என்றான்.

“துரையைக் கூப்பிட ஒரு ஆளா...? விளங்கிடும்..!” என்று பொரிந்து கொண்டே போனாள் விஷ்வ துளசி.

பிரவீனின் கண்களுக்கு விஜய் அகப்படவே இல்லை. துளசியோ கடுப்பில் இருந்தாள். அவளுடைய பொறுமை போய்க் கொண்டிருந்தது.

பிரவீன் மட்டும் வருவதைப் பார்த்தவள், அவனை முறைக்க,

“இங்க தான் இருந்தான். இப்ப என்னடான்னா ஆளையேக் காணோம். எங்க போனான்னே தெரியலை..!” என்று பிரவீன் விளக்கம் தர,

“அவன் புத்தி தெரிஞ்சும் அவன் பின்னாடியே திரியற பாரு...உன்னை நினைச்சாத்தான் எனக்குக் கவலையா இருக்குண்ணா..!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க,தூரத்தில் சிவந்த கண்களும், கோபமேறிய முகமுமாய் வந்து கொண்டிருந்தான் விஜய்.

“அவன் வந்துட்டான். நீ பேசாம இரு..!” என்று தங்கையை அடக்கினான் பிரவீன்.

“வண்டியை எடு பிரவீன் போகலாம்..!” என்றான், சற்றே நிதானம் தவறி.அவனின் ஓவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தாள் துளசி.

“எங்கடா போன...?” என்று பிரவீன் கேட்க,

“வண்டியை எடு..!” என்றான் மீண்டும் அழுத்தி. அவன் அமைதியாக வண்டியை எடுக்க, முன்சீட்டில் அமர்ந்தவன், அப்படியே தலையை சாய்த்துக் கொண்டான்.கண்கள் இறுக மூடியிருக்க,உள்ளுக்குள் உருண்ட விழிமணிகள் அவன் மன நிலையை எடுத்துச் சொன்னது.

“பெரிய இவன்..! இவனுக்கு என் அண்ணன் டிரைவர் வேலை பார்க்கனுமா..?” என்று கறுவிக் கொண்டிருந்தாள் துளசி.

வீடு செல்லும் வரை அந்த பயணம் ஒரு அமைதிப் பயணமாகவே இருந்தது. பின்னால் துளசி இருந்ததையே விஜய் கவனிக்கவில்லை.

கலைந்திருந்த அவனின் மேல் சட்டை எதையோ உணர்த்தியது அவளுக்கு.முடிகளும் கலைந்து, விழிகள் சிவந்திருந்த அவனின் தோற்றம் அவளுக்குள் பல பழைய நினைவுகளை மீட்டுக் கொடுக்க, அவளும் மனதிற்குள் தவித்துப் போனாள்.

வீட்டின் முன் நின்ற காரில் இருந்து சில நிமிடங்கள் எந்த சத்தமும் இல்லை. பிரவீன் எதுவும் பேசாமல் இருக்க, துளசியோ வேகமாக இறங்கியவள், கதவை அறைந்து சாத்தினாள். அந்த சத்தத்தில் கண்களைத் திறந்த விஜய், சத்தியமாக அவளை எதிர்பார்க்கவில்லை. அவனை முறைத்தபடி உள்ளே செல்ல,

“விஷ்வா நம்ம கூடவா வந்தா..!” என்றான் குழறலாய்.

“ம்ம் ஆமா..! நேத்து அவ குடிச்சான்னு என்கிட்டே அந்த தாண்டு தாண்டுன. இன்னைக்கு நீ என்ன பண்ணி வச்சிருக்க..? தாத்தாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் விஜய். இதென்ன புதுப் பழக்கம்..?” என்றான்.

“இது பழைய பழக்கம்...” என்று பிரவீனுக்கும் தெரியாது, விஜய்க்கும் தெரியாது.

“அங்க என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியாதுடா...?” என்றான் விஜய்.

“என்ன நடந்தது...? நான் உன்னை விட்டு வந்த அந்த கொஞ்ச நேரத்துல என்ன நடந்திருக்க போகுது..? பேசாம போய் படுத்திடு. காலையில பேசிக்கலாம்..!” என்றான் பிரவீன்.

அவனைப் பார்த்து ஒரு விரக்தி சிரிப்பு சிரித்தவன், அதே விரக்தி நடையுடன் இறங்கி உள்ளே சென்றான். எப்போதும் வீட்டிற்குள் வரும் போது கம்பீரமாக வரும் பேரன், இன்று துவண்டு போய் வருவதைக் கண்ட ரத்னவேல் மனதிற்குள் குமைந்து போனார்.

அவன் தலையை குனிந்தபடி செல்ல எத்தனிக்க...

“நீ எப்பவும் தலை குனியாத விஜய். அதே மாதிரி நாங்களும் தலை குனியற மாதிரி நடந்துக்காத..!” என்றார் ரத்னவேல்.

பார்வையிலேயே தன்னைக் கண்டு கொண்ட ரத்னவேலை நினைத்து விஜய்க்கு மனதிற்குள் பெருமை. இந்த வயதிலும் அவருடைய புத்திக் கூர்மை அவனை வியக்க வைக்கும்.

“இந்த வீட்ல ஆம்பிள்ளைக்கு ஒரு சட்டம், பொம்பளைக்கு ஒரு சட்டம்..!” என்று முனங்கினாள் துளசி.

“பேசாம இரு துளசி..!” என்று வள்ளியம்மை அதட்ட,

“என்னை எதுக்கு அடக்குறிங்க..? உங்க பேரனை அடக்குங்க முதல்ல. நேத்து என்னமோ அந்த குதி குதிச்சிங்க. இன்னைக்கு என்னடான்னா அப்படியே பம்முறார் உங்க வீட்டுக்காரர்...” என்றாள் சத்தமாக.

“வாயை மூடுடி..! எல்லாம் அவர் குடுக்குற செல்லம்..! சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடணும்.” என்று வித்யா புலம்ப ஆரம்பித்தார்.

“துளசி..! உன்னோட ரூம்க்கு போ..!” என்றபடி பிரவீன் உள்ள வர,

“வா பிரவீன்..! எப்பப்பா வந்த..? வந்த உடனே வீட்டுக்கு வரணும்ன்னு தோணலையா...? நேரா கம்பெனிக்கே போயிட்டியா..?” என்று வித்யா ஆதங்கப்பட,

“கொஞ்சம் வேலை இருந்துச்சும்மா..!ஒரு பிஸ்னஸ் பார்ட்டி வேற.. அதான் போயிட்டு வரோம்..!” என்றான் பன்மையில்.

“சரி சாப்பிட வாங்க..!” என்றார் நீலா.

“எனக்குப் பசியில்லை..!” என்றபடி விஜய் நகர,

“விஜய்..! சாப்பிட்டுப் போ..!” என்றார் வள்ளியம்மை. ஏனோ பாட்டியின் வார்த்தையை அவன் என்றும் மீறியதில்லை. பேசாமல் வந்து சாப்பிட அமர்ந்தான்.

வழக்கம் போல் அமைதியாக சாப்பிட்டு முடிக்க, அந்த நேரத்திற்கு அருணும் வந்து சேர்ந்தான். விஜய்யைப் பார்த்தவன், அமைதியாய் இருக்க, அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்த ரத்னவேல் தாத்தா...

விஜய், உனக்கு துளசியை கல்யாணம் பேசி முடிக்கலாம்ன்னு இருக்கோம்..!” என்றார். அவர் சொன்னவுடன் அங்கே ஊசி விழுந்தால் கூட சத்தம் வரும் அளவிற்கு அமைதி நிலவ....அவரை யோசனையுடன் பார்த்தான் விஜய்.

“அப்பா என்ன சொல்றிங்க..?” என்றார் வித்யா, பயந்தவராய்.

“ஆமா வித்யா. எனக்கு இது தான் சரின்னு படுது. உன் வீட்டுக்காரர் வந்த உடனே நீ பேசு..!” என்றார் தாத்தா.

“என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க தாத்தா உங்க மனசுல. என் சம்பந்தபட்ட முடிவை நீங்க எப்படி எடுக்கலாம்.உங்களுக்கு அந்த அதிகாரத்தை யாரு கொடுத்தது...?” என்றாள் துளசி.

“துளசி என்ன பழக்கம் இது...? பெரியவங்கன்னு ஒரு மரியாதை இல்லாம..?” என்று நீலா அதட்ட,

“அத்தை நீங்க வேணுமின்னா அப்படி இருங்க. என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது. அப்படி இருக்கனும்ன்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது...!” என்று கத்தத் தொடங்கினாள் துளசி.

“வாயை மூடு துளசி..!” என்றான் பிரவீன்.

“யாரு என்ன சொன்னாலும், இது தான் என் முடிவு..!” என்றார் ரத்னவேல்.

“அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. கண்டவனையும் என்னால கட்டிக்க முடியாது. பொறுக்கிக்கு இந்த துளசி கேட்குதோ..?” என்றாள் ஆங்காரமாய்.

“ஏய்..!” என்று பிரவீன் அவளை அடிக்கக் கையோங்க,

“டமார்..!” என்ற சத்தத்தில் திரும்பினர் அனைவரும். அங்கிருந்த கண்ணாடி ஜாடியை உடைத்திருந்தான் விஜய். கைகளில் கீறி ரத்தம் வடிய, இறுகிய முகத்துடன் தரையையே வெறித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய கைகளில் ரத்தத்தைப் பார்த்த அனைவரும் பதற, பதற வேண்டியவளோ அப்படியே நின்றிருந்தாள். அனைவரும் அவன் அருகில் செல்ல எத்தனிக்க, அனைவரையும் கையால் தடுத்தவன், வேக எட்டுக்களுடன் தனது அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

“இப்ப உனக்கு சந்தோஷமா...? அவனைக் காயப்படுத்தனும் அப்படிங்கிறது தானே உன்னோட நோக்கம். அது இப்போ திவ்யமா நிறைவேறிடுச்சு. இப்போ சந்தோஷமா...?போ.. போய் நிம்மதியா தூங்கு..!” என்ற பிரவீன், அங்கிருந்து நகன்றான்.

“எங்க அண்ணன் உனக்கு பொறுக்கியா...? இந்த இடத்துல இதே வார்த்தையை வேற யாராவது சொல்லியிருந்தா, நடக்குறதே வேற...!” என்று அருண் வார்த்தையை கடித்துத் துப்பிவிட்டு சென்றான்.

அனைவரும் ஆளாளுக்கு அவளைப் பேசிவிட்டு செல்ல, எதையும் வெளிக் காட்டாமல் இருந்தவள், அறைக்குள் சென்றவுடன் உடைந்தே போனாள். அவளைப் புரிந்து கொள்வார் அங்கு யாருமில்லை.தன்னை மீறி வந்த கண்ணீரைக் கூட கஷ்ட்டப்பட்டு அடக்கினாள். பெண்களின் பலவீனம் கண்ணீர் தானே.



 
:love: :love: :love:

Nice update

நேத்து துளசி குடிச்சிட்டு வந்தா...
இன்னிக்கு விஜயா???
ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன பிரச்சனை???
Waiting for next episode...
 
Last edited:
:love: :love: :love:

என்னவோ இருக்குதே விஜய் துளசியோட.......
தாத்தா நாங்களும் தலை குனியுற மாதிரி நடந்துக்காதே :unsure::unsure::unsure:
திவ்யா வேற துரத்துரங் அவனை.....
துளசிக்கு யாருமே சப்போர்ட் பண்ணலையே......
விஜயை அவள் நேருக்கு நேர் பார்க்காதது வெட்கத்தினால் இல்லை....... அப்போ என்ன :unsure::unsure::unsure: அது விஜய்க்கு தெரியலையே......

@Uma saravanan எனக்கு அத்தை மகன்னு கூட சொல்லலாம்....... மகள் தானே???
 
Last edited:
Top