Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 17 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 17 ❤️‍🔥

"பகலன் காட்டும்
கோபப்பார்வை எல்லாம்
அவன் சுந்தர மொழியோ.....!?"



காலையை விட நண்பகல் உணவு படு வேகமாக நடந்தது.ஆனால் வீட்டின் உதவும் கரங்கள் பலரும் இயந்திர தனமாய் செயல்பட்டனர்.உள்ளே உரிமையாக சென்று சமைக்க மனம் தயங்கியது ரிதத்திற்கு.


இன்னும் சில தினங்களில் அவளின் இல்லமாக உருமாறும் இடம் தான் என்றாலும் அவளால் அங்கே செல்ல கால்கள் தயங்கியது.

மற்ற நேரம் எனில் அகரன் கேட்பான் என்பதற்காக செல்லும் போது தனக்கும் தாத்தாவிற்கும் செய்து கொள்வாள்.

இப்பொழுது அகரன் இல்லாது போக இவளே அவனை நோக்கி சென்றாள்.

மணி பதினொன்று நோக்கி செல்ல..

"ஜாமுன் என்ன பண்றீங்க!?" வினவலோடு சிறுவன் அறைக்கு செல்ல...அவனோ கைகளில் ரூபி கியூபை வைத்து சுற்றிக் கொண்டிருந்தான்.

சரியாக மணி பதினொன்றாக கையில் இருந்த ரூபி கியூபை அதன் இடத்தில் வைத்துவிட்டு.ஒரு புத்தகம் ஒன்றை எடுத்து மெதுவாக எழுதத் தொடங்கினான்.

அதில் 'ஆச்சர்யம் என்னவெனில்!?' அந்த புத்தகம் எழுத்து பயிற்சிக்கான புத்தகம் என்பதுடன் அதில் அன்றைய தினம்,தேதி அனைத்தையும் குறிப்பிட்ட பின்பே எழுதத் தொடங்கினான் அவன்.


மணி பன்னிரண்டு என்றாக எழுதுவதை நிறுத்த சரியாக உதவியாளர் ஒருவர் வந்து அகரன் நீச்சல் பயிற்சியாளர் வந்திருப்பதாக கூற.

ரிதம் மிரண்டே விட்டாள்...

"இவன் பிள்ளையா!? அல்லது நேரத்திற்கு வேலை செய்யும் இயந்திரமா!?சிறுவனுக்கு எதற்கு இந்த 'நேர மேலாண்மை'!? ஏன் பிள்ளையை இவ்வாறு வளர்க்கின்றான்!? ஒருவேளை பணக்காரர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை பட்டியலுக்குள் தான் வளர்ப்பரா!?கூண்டுக்குள் அடைத்து வளர்ப்பதற்கு அவர்கள் விலங்குகள் அல்லவே! அதுவும் மூன்று வயது சிறுவனுக்கு இது மிகவும் அதிகம்!" என்றே தோன்றியது.

தன்னால் முடிந்த அளவு அவனை வயதின் துள்ளல் துடிப்போடு வளர்க்க ஆசை கொண்டாள் ரிதம்.

அவனுக்கு திறமைகளை வளர்ப்பது பெற்றவன் கடமை தான்.ஆனால் அது குழந்தையின் 'இயல்பை இழந்து' பெறுவதாக இருக்கக்கூடாது அல்லவா!

அனைவருக்கும் பிடித்த பிள்ளை பருவம் அல்லவா.

அதனால் தான் குமரகுருபரர் கூட உலகை ஆண்ட முதல் பெண்ணரசி,பாண்டியர் குல பேரரசி அன்னை மீனாட்சியை அவளின் பிள்ளை பருவத்தை தன் பாட்டிலே வடித்தார்.

அத்தகைய சிறப்பு வாய்ந்தது அல்லவா பிள்ளை பருவம்.

அதையே இங்கு தலைகீழாக மாற்றி..இயல்பை திரித்து.. தன் வயதை கடந்த 'முதிர்வு எதற்காக!?'

ஒரு குழந்தைக்கு பொறுப்புகளை கொடுக்கலாம்.ஆனால்! அதன்மனது வாழ்க்கை இன்பங்கள் 'எதுவென!?' அறியாது... கடிவாளம் இட்ட குதிரையாக ஒரே நேர்கோட்டில் சென்றால் 'சலிப்பு வந்துவிடாதா!?'

இவற்றை சிந்தித்தவள்,இனி அகரன் தன்னுடன் இருக்கும் வரை அவனை 'பிள்ளை பருவ இன்பங்களை காண செய்யவேண்டும்!' என்று நினைத்துக் கொண்டாள்.


அத்தோடு,'வேல் தாத்தா நன்றாக இருக்கும் போது அவரிடம் இவர்கள் கதையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்!'

இவளின் எண்ணம் எல்லாம் சுண்ணம் பூசிய வெற்று சுவராக அங்கே தாத்தா குழந்தையாய் மாறி பஞ்சு மெத்தையில் குதூகலமாய் இருந்தார்.


தாத்தாவின் குழந்தை தனம் அவளுக்கு புன்னகை தரும் ஒன்று.அந்நேரம் தாத்தா செய்வது அகரன் போல தோன்றும்.
அவருக்கு உணவை கொடுத்து மீண்டும் உறங்க செய்து.மாலை தோட்டத்தில் நடைபயிற்சி.இரவு உணவு அதன் பின் சிறிது நடை,உறக்கம்.

இதுதான் வேல் தாத்தாவின் தற்போதைய நிலவரம்.

மருத்துவரும்,"அவருக்கு நல்ல உறக்கமும் சுற்றி இருக்கும் சூழலும் நல்ல முறையில் இருக்க வேண்டும்!" என்று கூறி இருந்தார்.

அதனால் ரிதம் உணவை நேரத்திற்கு கொடுத்து அவரை உறங்க செய்திருந்தாள்.

_____________________________________________

"தீராது தூரும் மழையில்
யாருமில்லா தனிமையில்
நானும் என் கரமதில்
சூடாக நீயும்
சர்க்கரை மிதம் கொண்டு
மிதந்தால் சுகமே....!!!"


திறந்திருந்த சாளர வழி உத்தரவு இல்லாது வந்து செல்லும் தென்றலின் வருகையை விழிமூடி ஆழ்ந்து அனுபவித்து கவிதை பகர்ந்தவாரு தேநீர் கோப்பையுடன் நின்றிருந்தாள் அழகு மங்கை ஒருத்தி.

அவளின் ஒற்றை புறமாய் சரிந்த கூந்தல் மறைக்கா கழுத்தின் அழகை ரசித்தவாறு பின்னால் வந்து நின்றான் அவன்.

அவன் தன் அருகே நெருங்கும் வரை காத்திருந்த பெண்ணவள்,நெருங்கிய மறுநொடி அவன் புறம் திரும்பி அவன் முகம் நோக்கி பார்க்க.

"டேக் ஓகே..."

"நெக்ஸ்ட் ஷாட் ரெடியா !?"

"தீக்ஷி மேடம் ரெடியா!?"

"சார் நீங்க ரெடியா!?" என்ற வினவலுக்கு அந்த இருவரும் 'ரெடி' என்று பதில் கூறிய உடன் அனைவரும் தயாராக அவரவர் இடத்தில் வந்து நிற்க.

ஷாட் 25
டேக் 1
கிளாப் அவுட்
ஆக்சன்

என்ற துணை இயக்குனரின் குரலில்
அந்த மரவீட்டின் தோட்டத்தில் அடுத்த காட்சி படமாக்கப்பட தயாராக இருந்தது.

அவள் தான் 'தீக்க்ஷிதா' தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மட்டுமல்ல; தற்போது இந்தியிலும் ஒரு படம் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

அதற்காக மும்பை செல்ல இருப்பதாக பரவலாக செய்திகள் பரவி வர.

அவளை செல்லமாக ரசிகர்கள் 'டி' (D) என்று அழைக்கும் அளவிற்கு திறமையான நடிகை.

'பிச்சைக்காரி வேடம்' என்றாலும் அதிலும் சிறப்பாய் நடிப்பாள்.எந்த வேடம் கொடுத்தாலும் சிறு பிணக்கு இல்லாது நடித்து கொடுப்பதில் வல்லமை பெற்றவள்.

ஐந்தாண்டு கால திரை துறையில் மூன்றாண்டுகளாக பிரபலமாக பேசப்படும் நடிகை.

தனக்கென பெரும் நடிகர்கள் வைத்திருக்கும் ரசிக பட்டாளம் போல இவளுக்கும் பெரும் படையே உண்டு.

இவளின் படத்திற்கு என்று தனி பெண் ரசிக்கக் கூட்டம் உண்டு.வீட்டு பெண்கள் பலரும் இவளின் நடிப்பு திறனை பாராட்டும் அளவிற்கு 'நம் பக்கத்து வீட்டு பெண்ணின் நளினம்' அவளிடம் பாந்தமாக பொருந்திப்போகும்.

முக்கியமாக அவள் நடிக்கும் காட்சிகளை ஒரே முறை நடித்துவிடுவாள்.

ஒரு முறைக்கு இருமுறை காட்சியாக்க படுகிறது எனில் அது கண்டிப்பாக மற்றவர்கள் தவறே அன்றி என்றும் தீக்க்ஷியின் தவறாக இருக்கமுடியாது
அப்படிப்பட்ட நடிகை அவள்.

மற்ற நடிகைகள் எடுக்கும் 'டேக்' அளவு என்றுமே இவள் எடுத்தது கிடையாது. அவளுக்கு இயற்கையாகவே நடிப்பில் அப்படி ஒரு திறமை இருந்தது.

அவள் திறமையை மட்டும் கொண்டுதான் சிறிது சிறிதாக முன்னேறி இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறாள்.

வந்திருக்கிறாள் என்பதை விட 'மின்னுகிறாள்' என்றே கூறலாம்.

பல இளைஞர்கள் தொடங்கி குடும்பப் பெண்கள் வரை ரசிக்கும் நடிகையாக அவள் மாற அவள் கடந்த பாதை 'எத்தகையது!?' என்பதை அவளை தவிர்த்து 'காலமே அறியும்!'

காட்சி நடித்து முடிந்ததும் உதவியாளன் வந்து நிற்க,அவளின் அழகுக் கலைஞர் அவளின் உடை மற்றும் சிகை அலங்காரக் கலைஞர்கள் அவளை சூழ.


உதவியாளன் முக்கியமாக பேச முயல்வது உணர்ந்து 'சொல்லு' என்று அவனிடம் கேட்க


"மேம் நமக்கு டைரக்டர் ரஜித் சிங் மூவில நடிக்க ஆஃபர் வந்திருக்கு நீங்க என்ன சொல்றீங்க!?"

"ஓகே பண்ணிடுங்க!"

"ஆனா மேம் இப்போ போய்ட்டு இருக்க இந்த மூவி!?" என்றவன் கேட்க

"இதுக்கு ஏத்த மாதிரி அதை செடியூள் பண்ணிக்கோங்க!"

"மேம் இது சின்ன மூவி.ஆனா அது பெரிய நேம்ஸ் மேம்!"

"எதுவா வேணா இருக்கட்டும்.எனக்கு எல்லாமே ஒன்னும் தான்!"

"அந்த படதுக்காக இந்த படத்தையோ; இந்த படதுக்காக அந்த படத்தையோ; என்னால விடமுடியாது சோ கோ அஹெட்!" என்றாள்.

இதோ இந்த 'அர்ப்பணிப்பு' தான் அவளை குறுகிய காலத்தில் உச்சாணிக் கொம்பில் ஏற்றி அழகு பார்க்கிறது.

நடிப்பு எனும் கலை முன்பு, பெரும் கதாபாத்திரம் பேசாத ஒன்றை சிறு பாத்திரம் பட்டென்று பேசி புகழ் பெரும்.
அந்த நுணுக்கங்கள் அறிந்தவள்.

"கலைக்கு பேதம் என்பதே கிடையாது!" என்பாள்.

அவளை பேட்டி எடுக்க ஒரு குழு வந்திருக்க.இடைவேளையில் அதற்கும் நேரம் ஒதுக்கி இருந்தாள்.

அவர்கள் வந்ததாக தகவல் வர அவர்களை தன் கேரவனிற்குள் அழைக்க.

வந்தவர்கள் அமர அவர்களுக்கு குடிக்க கொடுக்குமாறு தன் உதவியாளன் மூலம் கொடுக்க செய்து.

அவர்கள் அசுவாசம் ஆன பின்பு தான் பேட்டிக்கான கேள்விகள் கேட்க அனுமதித்தாள்.


"மேடம் உங்களுக்கு பெரிய படத்துல ஆஃபர் வர்ற அதே நேரம் சின்ன படத்துல நடிக்கவும் ஆஃபர் வந்தா நீங்க எதை நடிப்பீங்க!?"


"அம்மாவுக்கு ரெட்ட குழந்தை வந்தாலும் சந்தோசம் தான் ஒரு குழந்தை வந்தாலும் சந்தோசம் தான்! இதுக்காக அதையோ அதுக்காக இதையோ என்னைக்கும் விடமாட்டேன்...என்னை பொறுத்தவரை நான் நடிக்கிற ஒவ்வொரு பாத்திரமும் என் குழந்தைங்க நான் அப்படி தான் பார்க்கறேன்!"

"சூப்பர் மேம்!"

"அது எப்படி சின்ன கதா பாத்திரங்களை கூட நடிக்க தயங்கமாற்றீங்க மேடம் நீங்க!?"

"இது கலை நண்பா! இதுல சின்னது பெருசுன்னு எதுவும் கிடையாது.எல்லாமே நடிப்பு தான்"

"உங்க எதிர்கால லட்சியம் என்ன!?"

"நடிகர் செந்தாமரை நடிச்சுட்டு இருக்கும் போதே தன் உயிரை விட்டாரு.எனக்கு அதுபோல நடிக்கணும்,நடிக்கும் போதே என் உயிர் பிரியணும் அவ்வளவு தான்!" என்றதோடு அன்றைய பேட்டி முடிய.

தன் அடுத்த காட்சியை நடிக்க சென்றாள் 'டி' என்கிற 'தீக்ஷி'


_____________________________________________


"விரித்து வரும் ஷ்ருங்கார
சிறகினிலே
கண்கள் பறிபோனது அவள்
அழகினிலே
தரித்துவரும் அவள் நறு
மணத்தினிலே
திசைமாறி பறந்த என்
மனத்தினிலே
உன்னை கொண்டாடத் துடித்தேன்
இயற்கையளே......!!!"



பாமரனையும் கவிபாடத் தூண்டும் இயற்கையின் அழகில் தோய்ந்த ஊரின் நடுவிலே அமைத்திருந்தது இரட்டை வீடு.

அந்த இரட்டை வீட்டில் ஒன்று ஏடு படிந்த தேநீர் கோப்பை போலே ஒட்டடைகள் படிந்து கிடக்க.

அதன் அருகிலே நல்லதங்காள் முன்பு அலங்கார பூசிதையாய் நின்ற 'மூலி அலங்காரி' போல் அத்தனை அழகுடன் நின்றது இல்லம் ஒன்று.

அவ்வீட்டின் மாடியில் நின்று வாரி வழங்கும் வள்ளலாக தென்றல் தீண்ட அருகே ஒட்டடை படிந்த வீட்டினை பார்த்திருந்தான் அவன்.

"இரண்டு வீடுகளும் முன்பு ஒருகாலத்தில் எப்படி இருந்தது!?" என்ற காட்சிகள் அவன் கண்முன் விரிந்தது.

அவன் நின்றிருக்கும் இல்லத்தை விட அருகில் இருக்கும் இல்லம் தான் அவன் பிள்ளை பருவத்தை சுமந்த செவிலித்தாய்.

இன்று கேட்பாரற்று கிடக்க மறைமுகக் காரணம் அவன் தந்தை தான்.

அவன் தாய் வீடு புதுமையில் மின்ன அவன் செவிலித் தாயான அடுத்த வீடு பாசி படிந்த தரையாக இருளடைந்து கிடந்தது.

அதனை கண்டு அவன் மனம் 'என்ன உணர்ந்தது!?' என்பதை அவனே அறிவான்.

"அந்த வீட்டிற்குள் யாரும் நுழைய கூடாது!" எனும் கட்டளையை விதித்தது அவன் தான்.

இன்று அதனை எண்ணி 'கவலை கொள்வானா!?' அவன்.

அவன் பெயரை அவன் தந்தை பாண்டியன் அழைக்கும் ஓசை கேட்டது.

"சௌந்தரு....! ஐயா சௌந்தரு..!"

"ஆ... அப்பா இதோ வர்றேன்பா!" என்றவாறு மாடியைவிட்டு இறங்கினான் இளங்காளையான சௌந்தர்.
 
இது யாரு புதுசா இருக்காங்க???
அனைவரின் திட்டுகளையும் பொறுக்கமுடியாது கதையின் பழைய மாந்தர்கள் சற்றே சுற்றுலா செல்ல.... புதிய மாந்தர்கள் அறிமுகம்🤣🤣🤣🤣🤣
 
Top