Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ - 8

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம்- 8

கல்லூரி முதல் நாள் சம்யுவுக்கும் ப்ரித்விக்கும் ஏற்பட்ட அறிமுகமே தரமான சம்பவம் தான்.
சம்யுக்தா இவளது தந்தை இவளுக்கு ஆசை ஆசையாய் இட்ட பெயர் .. வடநாட்டு மன்னனான பிரித்விராஜ் மகா வீரன் ..முகலாய படையெடுப்பை எதிர்த்து பலமுறை போரிட்டு வெற்றி கண்டவன் ..அவனது வீர தீரத்தை செவி வழி கேட்டே அவன் மீது அளவில்லாத காதல் கொண்டவள் சம்யுக்தா .

அவளுக்கு ப்ரித்விராஜின் ஓவியத்தை காண்பித்த ஓவியன் ஒருவன் அவளது ஓவியத்தையும் மனதையும் ப்ரித்விராஜிடம் பகிர இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் காணாமலே காதலாகி கசிந்துருகினர்...

வழக்கம் போல் அவளது தந்தைக்கு பிரித்விராஜ் மீது வெறுப்பு வர ..தன் மகளுக்கான சுயம்வரத்திற்கு அவனை மட்டும் அழைக்காமல் ..அவனது சிலையையும் வாயில் காவலன்போல் நிற்க வைத்ததாக சில இலக்கியங்கள் கூறுகின்றன...

தன் கையில் மாலையோடு வந்த சம்யுக்தாவோ பிற அரசகுமாரர்களை ஒதுக்கி , மாலையை அங்கு சிலை வடிவில் இருந்த தன் காதலனுக்கு அணிவிக்க ...
மறைந்திருந்த பிரித்விராஜ் தன் குதிரையில் வந்து சம்யுக்தாவை தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்து கொண்டான்.

அந்த காலத்தில் நடைபெற்ற தீரமான காதல் கதை என்பதால் அப்பெயரின் மேல் காதல் திருமணம் செய்த மோகனுக்கு பெரும் பிடித்தமுண்டு.

ஆனால் சம்யுவுக்கோ கடுப்புதான் ..என்று இந்த வரலாறு தெரிந்ததோ ..அன்றிலிருந்தே !

யாராவது செவி வழி ஒருவனை பற்றி கேட்டு காதல் கொள்வார்களா ? அவன் நல்லவனா கெட்டவனா என்று அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டாமா என்று தோன்றும்.
அந்த சம்யுக்தா சரியான முட்டாளாக இருக்கிறாளே என்றும் அந்த பெயரை தனக்கு வைத்துவிட்டார்களே என்று கோபம் வரும்.

அதிலும் விழாக்களுக்கு செல்லும் போது வரலாறு தெரிந்த ஏதாவதொரு உறவினர் "என்ன சம்யுக்தா ? எப்போ உனக்கான பிரித்விராஜ் வந்து உன்னை தூக்கிட்டு போக போகிறான்?" என்று விவஸ்தையின்றி கேட்கும் போதும் கடுப்பின் உச்சத்திற்கு சென்று விடுவாள்.

தோழிகளிடமும் இதே கிண்டல் கேலி தான் . ஆகையால் ப்ரித்விராஜின் பெயரை கேட்டாலே காண்டாகும் நம் நாயகியை சீனியர் ப்ரகஸ்பதிகள் சரியாக நம் ப்ரித்வியோடு கோர்த்துவிட அப்போது ஆரம்பித்தது இருவருக்குமான மெகா சீரியல் சண்டை!

கல்லூரி முதல் நாள் .. ராகிங் தடை செய்யப்பட்டிருந்தாலும் ..சட்டத்தை கரைத்துக் குடித்துக் கொண்டிருந்த நம் சீனியர் மாணவர்கள் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து செவ்வெனே ராகிங்கில் ஈடுபட்டிருந்தனர்.

வீறு கொண்ட நடையும் வெட்டும் பார்வையும் கொண்ட நம் சம்யு அவர்களிடம் மாட்டியதொன்றும் அதிசயமில்லை !
அவளை ஏதேதோ செய்ய சொல்லி படுத்தி எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அடுத்து வந்து நின்றவனின் பெயர் கேட்டதும் குஷியாகி விட்டது ..

"அடேடே பாருடா சம்யுக்தா வந்ததும் தானா பிரித்விராஜ் பின்னாடியே வந்துட்டாரு " எனவும் அவனை திரும்பி பார்த்த சம்யுக்தாவுக்கு முதல் பார்வையிலேயே அவனை பிடிக்கவில்லை .

'ஆளை பாரு .. எவ்வளவு அலட்சியமா பாக்குறான் . ஏதோ வேண்டாத பொருளை பாக்குற மாதிரி முகத்தை சுளிக்கிறான் ..அப்படியே இவன் கண்ணை நோண்டனும்', என்று வயலண்டாய் யோசித்துக் கொண்டிருக்க ..

ஆடவன் மனமோ 'எங்கிருந்து தான் வந்து சேந்தாளோ.. இவள் பின்னாடி சுத்துறதுக்கா நான் காலேஜில் சேந்தேன்.. ஆளையும் முழியையும் பாரு! சரியான திமிர் பிடிச்சவ . ஆளை பாரு .. திரிஷ்டிக்கு வச்ச பூசணிக்காய் மாதிரி’ என்று நினைத்தது.

உண்மையில் சம்யுக்தா அத்தனை குண்டெல்லாம் இல்லை ..சற்றே பூசிய உடல்வாகு!

ப்ரித்வியோ ஏற்கனவே பெண்களிடம் பேசக் கூட மாட்டான் ..ஒரு அலட்சிய பார்வை தான் இருக்கும். இப்போது அவளோடு சேர்த்து வைத்து பேசியதும் இன்னும் பிடிக்காமல் போய்விட்டது.

"வாடா இங்கே" என்று அழைத்த சீனியர் மாணவன் ..
" இப்போ என்ன செய்யிற ?" என்று தன் ஓட்டை சைக்கிளை காண்பித்து " இதுதான் உன் குதிரையாம் ..இதில் வந்து நீ உன் சம்யுக்தாவை தூக்கிட்டு இந்த காலேஜை ஒரு சுத்து சுத்தி வருவியாம் ..சரியா?" என்று கொளுத்திவிட..

" நான் ஒன்னும் அவன் சம்யுக்தா இல்லை " என்று அவளும் "இவ ஒன்னும் என் சம்யுக்தா இல்லை சீனியர் " என்று அவனும் பொங்க..

"அந்த வெங்காயமெல்லாம் இருக்கட்டும் ..இப்போ சொல்றத செய்யுங்க "

"நோ ..முடியாது " என்று இருவரும் ஒரே குரலில் சொல்ல சீனியர் மாணவனுக்கு கோபம் வந்துவிட "செய்யாம நீங்க இங்க இருந்து நகர முடியாது " என்று ஒரே பிடியாய் அவனும் நின்று விட வேறு வழியின்றி இருவரும் ஒத்துக் கொண்டனர்.

அவர்கள் நின்றிருந்த இடம் கல்லூரியின் இடப்புறம் சற்று மறைவாய் ஒரு மண்டபம் போன்ற அமைப்பில் இருக்க வசதியாக அங்கே அமர்ந்து ராகிங் செய்துகொண்டிருந்தனர்.

இதற்குள் ஒருவன் அருகில் இருந்த ஒரு இத்துப் போன கயிறை எடுத்து இவள் கையில் கொடுத்து "இந்த மாலையை உங்கள் மனம் விரும்பியவனுக்கு அணிவியுங்கள் ராஜகுமாரி " என்று நாடக பாணியில் கலாய்க்க ...

இதற்குமேல் இறங்கிப்போக கூடாது என்று முடிவெடுத்தவளாய் ..கையில் அந்த கயிற்றை எடுத்துக் கொண்டு வேண்டுமென்றே ஒவ்வொரு சீனியராய் பார்த்துக்கொண்டே உதடுகளை பிதுக்கி தலையை மறுப்பாய் அசைத்துக் கொண்டே வந்தாள் சம்யு.

ஒவ்வொருவனையும் பார்த்து "அழகாயில்லை .. மூக்கு சப்பையா இருக்கு ..ஹைட் பத்தாது ..தலையில ரெண்டு வெள்ளை முடியிருக்கு " என்று சரமாரியாக அவர்களை கலாய்க்க சுற்றி நின்ற மாணவர் கூட்டம் 'முதல் நாளே இவ்வளவு தில்லா ' என்று பார்க்க ..'என்னை சீண்டினால் இப்படித்தான் ' என்று மனதுக்குள் நினைத்தவளாய் ..

அந்த மண்டபத்தின் படிகளுக்கு இருபுறமும் இருந்த கைப்பிடியில் ஒரு யானை தும்பிக்கையை உயர்த்தி நிற்பது போல் சிலை ஒன்று இருக்க .. திரும்பி அந்த மாணவர்களை பார்த்தவள் .." ஆக்சுவலா ..சம்யுக்தா ப்ரித்விராஜுக்கு மாலை போட மாட்டா .. அவனோட சிலைக்குத்தான் போடுவா ..அத மாத்த கூடாது சீனியர்ஸ் ..வரலாறு முக்கியம் பாஸ் " என்றபடி .. மனதுக்குள் 'இத்துப் போன கயிறாகவே இருந்தாலும் அதை உன் கழுத்தில் போட மாட்டேன் போடா ' என்று நினைத்துக் கொண்டே அந்த யானை சிலையின் கழுத்தில் அணிவிக்க ..
அவ்வளவு நேரம் கோபத்தை அடக்கியபடி நின்ற ப்ரித்விக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகியது.
'இன்னிக்கு உன்னை ஒரு வழி பண்றேன் பாரு ' என்று மனதுக்குள் சூளுரைத்தவனாய் அவளை சட்டென்று கைகளில் தூக்கி அந்த ஓட்டை சைக்கிளில் அமர வைத்துக் கொண்டு வேகமாய் கிளப்பினான்.

அதுவரை தந்தையின் பைக்கில், பின்னே பதவிசாய் அமர்ந்து பயணித்திருந்த பாவைக்கு சைக்கிளின் கம்பியில் அமர்ந்து இருபுறமும் முன்பின் அறியாத ஆடவனின் கரங்கள் வளைத்திருக்க மிதமிஞ்சிய வேகத்தில் பயணிப்பது புது அனுபவமாய் இருக்க இதயம் இருமடங்காக துடித்தது.

மனதுக்குள் உண்மையாகவே குதிரையில் அமர்ந்திருப்பது போல் ஒரு பிம்பம் தோன்ற .. சைக்கிளின் வேகத்தில் கண்களை இறுக்க மூடிக் கொள்ள… சட்டென்று எங்கோ பறப்பதுபோல் இருந்தது.

சைக்கிளின் வேகம் கூடியதும் அதிலிருந்து ப்ரித்வி குதித்து இறங்கி விட சைக்கிளோடு சென்று இவள் வேகமாக போய் எதிரிருந்த மரத்தில் மோதி கீழே விழுந்து விட்டாள். நல்ல வேளையாக விழுந்த இடம் மணலும் சருகுகளும் அதிகமாக இருக்க அடியேதும் படவில்லை ..

லேசான சிராய்ப்புகளோடு மேலெல்லாம் குப்பையும் கூளமுமாய் எழுந்து நின்றவளை பார்த்து அவன் நக்கலாக சிரிக்க "இடியட் ..இப்டியாடா கீழ தள்ளி விடுவ ? " என்று எண்ணையில் போட்ட கடுகு போல் அவள் பொரிய… இவனுக்கு அவ்வளவு நேரம் இருந்த கடுப்பு மாறி சிரிப்பு பொங்கியது.

அன்று கல்லூரியின் பேசுபொருளே இவர்கள் இருவரும் தான் ... வகுப்பறை , உணவகம் , நூலகம் , விளையாட்டுத்திடல் , விடுதி ..ஏன் ? ஆசிரியர் ஓய்வறைகளில் கூட இவர்கள் நடத்திய தரமான சம்பவமே ட்ரெண்டிங்கில் ஓடிக் கொண்டிருக்க ... இவன் வாய் மொழியாகவே அதனை கேட்டு கொண்டிருந்த இவன் பள்ளி நண்பர் கூட்டமும் விழுந்து விழுந்து சிரித்தது.

அனைவரும் வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்திருக்க முதல் நாள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

"டேய் சிரிக்காதீங்கடா .காண்டாகுது" என்றவுடன் சற்றே சிரிப்பை அடக்கியவர்கள் .. இவன் உயிர் நண்பன் தருண், "நல்ல வேளைடா ..உங்க காலேஜில் யானை சிலை வச்சிருந்தாங்க ..நாய் சிலையை வச்சிருந்தாங்கன்னு வை.. அவ்வளவுதான்.. உன் மானம் கப்பலேறியிருக்கும் " என்று சிரிக்காமல் கூற மறுபடி அங்கே அடக்க முடியாத சிரிப்பலை!


இப்படியாக இவர்கள் இருவருக்குமான 'டக் ஆஃப் வார் ' தொடங்கியது அமோகமாய்
!
 
Top