Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ - 6

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member

அத்தியாயம் -6


"எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு மோகன் " நட்புணர்வோடு கூறிய நவநீத கிருஷ்ணனை மரியாதையோடு நோக்கினார்கள் மோகனும் தனுஜாவும்.

அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த அம்ரு முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி!
நளினமும் அழகும் சரிசமமாக கலந்த டீல் நிற சாப்ஃட் சில்க் புடவையில் எளிய ஆபரணங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.

விழிகள் தானாக எதிர் அமர்ந்திருந்த தன்னவனை நோக்க ..அவனும் விழிகளில் தேங்கிய காதலோடு இவளையே நோக்கிக் கொண்டிருந்தான்.

உள்ளறையில் இருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாள் சம்யு. அவளை வெளியே வரக் கூடாது என்று பணித்திருந்தார் மோகன்..

"ஏன் வரக் கூடாது ?" என்று பாய்ந்தவளிடம் "நீ ஏதாவது எடக்கு மொடக்கா பேசி வெப்ப ..உன் வக்கீல் மூளையும் வாயும் சும்மா இருக்காது. அதனால நான் கூப்புட்றவரை நீ வெளிய வரக் கூடாது" என்றிருந்தார்.

அம்ருவுக்கு துணையா காயத்ரியும் வந்திருந்தாள். அவளது ஊர் நாகர்கோவில் அருகே . இங்கே பீஜியில் தங்கி வேலை செய்கிறாள்.

அம்ருவும் ரஞ்சித்தும் ஒருவரை ஒருவர் விழியெடுக்காமல் பார்த்திருக்க..... "அக்கா உங்க உயிர் தோழி அவங்க காதலனை விழியெடுக்காமல் நோக்குவதை பாக்கும்போது நான் காலேஜ் மேகசினுக்காக ஒரு கவிதை எழுதினேன். அதுதான் நினைவு வருதுக்கா " என்றாள் சம்யு .

“ கொஞ்சம் எடுத்து விடேன்…கேப்போம் “

"க்கும் " என்று தொண்டையை கனைத்தவள்
மேடையில் கவிதை படிக்கும் பாவனையில்..


“அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்…

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்…

விழிகளின் ஈர்ப்பிலிருந்து
இருவரும் விடுபட்டு பார்க்கையில் …
வீதிகள் வெறிச்சோடிப் போயிருந்தன..

மனிதர்கள் பூமியை காலி செய்து
நிலவில் குடியேறி இருந்தனர்!”

என்று கூற விழுந்து விழுந்து சிரித்தாள் காயத்ரி.

“ஆக மொத்தம் உன் அக்கா லவ் மூட்லருந்து பிரளயமே வந்தாலும் வெளியே வர மாட்டான்னு சொல்லு.”

உள்ளிருந்து வந்த சிரிப்பு சத்தம் கேட்டு மோகன் இவர்களை முறைக்க..வாயை பொத்தி சிரிப்பை தொடர்ந்தனர் இருவரும்!

மோகனின் வீடு அந்த புகழ்பெற்ற அடுக்கு மாடி குடியிருப்பில் அமைந்திருந்தது. பழைய மஹாபலிபுரம் சாலையில் அமைந்திருந்த அந்த ஆடம்பரமான குடியிருப்பில் அவர் வாங்கியிருந்த அந்த நான்கு படுக்கையறை கொண்ட வீடே அவர் நல்ல நிதி நிலைமையில் உள்ளவர் என்று பறைசாற்றியது.

ஒரு நடுத்தட்டு சாமானியன் வியந்து நோக்க கூடியது தான். அனால் அந்த வீட்டையே எலி பொந்தை பார்வையிடுவதைபோல் பார்த்துக் கொண்டிருந்தார் சத்யபாமா.

அவரும் ஸ்ரீயும் ஒருவருக்கொருவர் துச்சமான பார்வை பரிமாறிக் கொள்ள.. ஹாலில் அமர்ந்து இருந்த மற்ற நால்வரும் கவனிக்கவில்லை. உள்ளறையில் இருந்து கதவோரமாக எட்டி பார்த்துக் கொண்டிருந்த சம்யுவுக்கும், காயத்ரிக்கும் நன்றாகவே தெரிந்தது.

"பாத்தியா சம்யு ? அந்தம்மாவும் அந்த பொண்ணும் வந்ததிலிருந்து யார் கிட்டயும் முகம் குடுத்து பேசல ..இப்போ என்னவோ வீட்டை கேலியா பாக்கிறாங்க "

"ஆமாக்கா.. அவங்க பெரிய பணக்காரங்களா இருக்கலாம் ..ஆனால் நாம அதுக்காக குறைஞ்சவங்களாயிட மாட்டோம். சொல்ல போனா பணத்தை தவிர மீதி எல்லா விஷயத்திலயும் ஒரு படி மேல தான் " என்றாள் ஆற்றாமையாய்.

"ஆனா ரஞ்சித் நல்ல டைப்.. அவன்கிட்ட இந்த வித்தியாசமெல்லாம் இருந்ததில்லை. மனிதர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பான் ”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இவர்கள் அறை ஜன்னலுக்கு வெளியே இருந்து ஒரு கணீர் ஆண் குரல் கேட்க ..ஆனால் உருவம் சரியாக தெரியவில்லை ..அது பொது வழி . சன்னலில் இருந்து சற்று தள்ளி நின்று யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிந்தான் அவன்.

" டேய் ..வர மாட்டேன்னு சொன்னவனை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்திருக்காங்க டா..இவனுக்கு பொண்ணு பாக்க நான் என்னடா செய்ய போறேன் .." எதிர்முனையில் இருந்தவரிடம் பேசிக் கொண்டிருக்க ..

'ஓ ..இவனும் இக்குடும்பத்தை சேர்ந்தவனோ..முதல்ல எல்லாரும் வந்தபோது அம்ருவை அலங்காரம் செய்து கொண்டிருந்ததில் இவனை கவனிக்கவில்லை போலும். குரலிலேயே எத்தனை அலட்சியம்?' என்று புகைந்தது சம்யுவுக்கு.

"மொதல்ல எதுக்குடா இந்த டிராமா ? அவன் தான் பொண்ண பாத்து முடிவு பண்ணிட்டான் ..அப்புறம் இவங்க எல்லாம் என்னமோ புதுசா பார்த்து பிடிச்சிருக்கா இல்லையானு சொல்றதெல்லாம் நல்லாவா இருக்கு. அவனுக்கு பிடிச்சிருந்தா போதாதா ? எங்கேயாவது பொது இடத்தில பாத்து நிச்சயம் பண்ண வேண்டியது தானே " என்றான்.

"பரவாயில்லை காயுக்கா.. ஏதோ கொஞ்சம் நல்லவனா இருப்பான் போல " என்றாள் தன் சொல்லை தானே வாபஸ் வாங்க போவது தெரியாமல்.

"அதுவும் மிடில் கிளாஸ் இல்லையா ..இதுக்கே அத்தை மாமா தாத்தா பாட்டின்னு ஒரு கும்பலையே அழைச்சிருக்காங்க ..ரொம்ப கஞ்சஸ்டடா இருக்கு .. ஒரே ஓவர் கிரௌடிங் ..அதான் காத்து வாங்கலாம்னு வெளிய வந்தேன்."

'ஓ ..இவனுக்கு பத்து பேர் உக்காந்துருக்கதே கூட்டமா தெரியுதா ?' எள்ளலாய் நினைத்துக் கொண்டாள் சம்யு.
மறுமுனை ஏதோ சொல்ல .."அவன் தான் நல்லா வசமா சிக்கிட்டானேடா . நமக்கெல்லாம் இந்த காதல் கல்யாணம் லாம் செட்டாகாதுடா. மொரட்டு சிங்கிளா லைஃபை அனுபவிக்கனும். "

'இப்படியே இருடா மகனே ..அந்த பெண்ணாவது தப்பிச்சிக்கட்டும் ' சம்யு மனதுக்குள் நய்யாண்டி செய்ய

"பொண்ணுக்கு ஒரே ஒரு தங்கச்சியாம் டா ..சரி சைட்டாவது அடிக்கலாம்னு பார்த்தா அந்த பொண்ணு என்னடானா வெளிய வரவே இல்லை .. அவ்வளவு அடக்கமாம் .. அவங்கப்பா சொன்னாரு ."

'அப்பாஆ ஆ .. 'என்று மனதுக்குள் கருவியவளை காயத்ரி அழைக்க இருவரும் மறுபடி கதவோரம் சென்று நின்றனர்.."என்னக்கா ?"

"இனிமே தான் முக்கியமா பேசுவாங்க சம்யு." இதுவரை மூன்று மாப்பிள்ளைகள் வந்து அவளை பெண் பார்த்து சென்றிருக்க அந்த அனுபவத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"எப்போ நிச்சயத்தை வச்சிக்கலாம் ?" மோகன் கேட்க ..இடையிட்டார் அவரது தந்தை நரசிம்மன்.
"மத்த விஷயமெல்லாம் பேசி முடிச்சிடுங்க" என்று எடுத்து கொடுக்க .. அதற்காகவே காத்திருந்த சத்யபாமா நிமிர்ந்து அமர்ந்தார்.

"அதெல்லாம் உங்க விருப்பம் .."என்ற நவனீயின் குரலை அழுத்தியபடி எழுந்தது அவரது கணீர் குரல்.

"நாங்க கேக்கிற அளவுக்கு உங்களால செய்ய முடியாது. அதனால் சீரெல்லாம் நாங்க கேட்க மாட்டோம் .. நீங்க கவலைப்பட வேண்டாம். ஆனால் எங்க தகுதிக்கேத்த மாதிரி கல்யாணம் நடத்தணும். பயப்படாதீங்க .. எல்லா செலவும் ஷேர் பண்ணிக்கலாம்.. "

அவரது உள் குத்து புரியாமல் "அதுக்கென்னங்க பண்ணிக்கலாம் " என்று மோகன் வெள்ளந்தியாய் பதில் சொல்ல தனுஜாவுக்கோ வயிற்றில் பிசைந்தது. பெண் பார்த்தலுக்காக அவர்கள் எடுத்து வந்த தட்டு வரிசைகளே அந்த பெரிய கூடத்தை நிறைத்திருக்க ..அவர்கள் ‘தகுதி’ என்னவென்று அவருக்கு நன்கு புரிந்தது.

"அப்போ சரி! நிச்சயத்துக்கு ஏதாவது ஸ்டார் ஹோட்டல்ல ஹால் புக் பண்ணிடுங்க ..மத்ததெல்லாம் அப்பப்போ சொல்றேன் " என்றபடி சத்யபாமா எழுந்து கொள்ள ..
"உங்க சின்ன பெண்ணை அறிமுகப்படுத்தவேயில்லயே ?" என்றார் நவநீ .

"பாருங்கக்கா ..நிச்சயத்துக்கே ஸ்டார் ஹோட்டலா கேக்கிறாங்க .. எங்கப்பா எல்லாத்துக்கும் தலையாட்டிகிட்டு இருக்காரு " என்று சம்யு புலம்ப “சம்யு! இங்கே வாம்மா" என்ற தாயின் குரல் கேட்டது .

தாயின் குரலுக்கு பதில் கொடுத்துக் கொண்டே கூடத்திற்குள் நுழைந்தவள் வாசல் புறமிருந்து அலைபேசியை சட்டை பைக்குள் நுழைத்தபடி உள்ளே நுழைந்த ப்ரித்வியைக் கண்டு ஹை வோல்ட்டேஜில் அதிர ..அவன் முகமும் கடுத்தது.

"இது தாங்க என் இளைய பொண்ணு சம்யுக்தா ..லாயரா இருக்கா .." என்று அறிமுகப்படுத்த .."அப்படியா ..என் பையன் ப்ரித்வியும் லாயர் தான் ..ரொம்ப நெருங்கிட்டோம் போங்க " என்று நவநீ கூற .. சண்டை சேவல் போல சிலிர்த்துக் கொண்டு நின்றனர் இருவரும்.
 
காலேஜ்ல இரண்டு பேருக்கும் ஏற்கனவே நல்லா முட்டிருக்கும் போல 😉😉😉😉😉😉😉😉😉 பார்த்த உடனே முறைச்சுக்கிட்டே நிக்குதுங்க 😆😆😝😆😝😝

இவனை ஏற்கனவே தெரியும் என்றால் குரலை வச்சு ஏன் கண்டு பிடிக்கல 😚😚😚😚😚😚😚

அம்மா பொண்ணு இரண்டு பேரும் ரொம்ப திமிரா தான் இருக்குதுங்க 😡😡😡😡😡😡😡😡
 
அட அட நானு அப்போவே சொன்னேன் ப்ரீத்திவிக்கு ஒரு சம்யுக்தா காத்திருக்கானு.😆😆😆😆😆😆
 
இரண்டு பேரும் ஏற்கனவே அறிமுகமானவங்க போல, இரண்டு பேருமே முறைக்கறத பார்த்தா,something rong போல 🤔🤔
 
Top