Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ - 4

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம்- 4


அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாள் அம்ரு!

நவநாகரீகமாக பளிச்சென்று இருந்த அந்த பத்து மாடி கட்டிடத்தில் தான் அவள் வேலை செய்யப்போகும் மென்பொருள் நிறுவனம் உள்ளது.

அது மிக புகழ் பெற்ற நிறுவனம். அந்த பெரிய வளாகத்தின் ஆறு மாடிகள் இவள் வேலை செய்ய போகும் நிறுவனமே ஆக்கிரமித்திருந்தது.

இன்று தான் முதல் நாள் ! கேம்பஸிலேயே முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்டிருந்த அம்ருவுக்கு சந்தோஷம் கட்டுக் கடங்கவில்லை.

அவளது தந்தை மோகன் ஒரு அரசு வங்கியின் மேலாளராக இருக்கிறார். மிகவும் வறுமையான குடும்பத்தில் இருந்து தன் முயற்சியால் படித்து முன்னுக்கு வந்தவர் அவர்.

தன்னுடன் பணிபுரிந்த தனுஜாவை காதல் மணம் புரிந்தவர். காதலின் பரிசுகளாக வாய்த்த இரு முத்தான பெண் பிள்ளைகளை பெற்றவர். மூத்தவள் அம்ரிதா அமைதியும் இனிமையும் நிறைந்தவள்.

இளையவள் சம்யுக்தா புயல் போன்றவள். ஆனாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த பாசம் கொண்டவர்கள்.

சிறு வயதிலிருந்தே வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று சொல்லியே இருவரையும் வளர்த்திருந்தார் மோகன்.

அதன் முதல் படியில் இன்று நிற்கிறோம் என்று நினைக்கும் போது மனதினுள் உவகை பொங்கியது அம்ருவுக்கு.

உள்ளுக்குள் படபடப்பு பொங்க தன்னை சமாளித்துக் கொண்டவளாய் லிப்ட்டில் ஏறி தான் செல்ல வேண்டிய தளத்தில் இறங்கியவளுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது.

இவர்கள் பயிற்சிக்காக என்று ஒதுக்கப் பட்டிருந்த அரங்கின் வெளியே ஜன்னலருகே நின்று பேசிக் கொண்டிருந்தான் அவன் ..ரஞ்சித் கிருஷ்ணன்!

அந்த கல்லூரி நிகழ்வுக்குப் பின்னர் பல மாதங்களுக்கு இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை .

கல்லூரி ,ப்ராஜக்ட் , கேம்பஸ், தேர்வுகள் என்று வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்க .. வீட்டிலோ சத்யபாமாவுக்கும் ரஞ்சித்திற்கும் வாக்குவாதங்கள் தான்.

" நம்ம கம்பெனி இருக்கும்போது நீ ஏன் கண்ணா வேற இடத்தில வேலை செய்யணும்.. இது நம்ம குடும்பத்துக்கே அசிங்கம்டா "

"இதுல எந்த அசிங்கமும் இல்லம்மா ..நம்ம கிட்ட சாஃப்ட்வேர் கம்பெனி இல்லையே மா ..நா என் துறையில் வேலை பார்த்தாதான் நான் படிச்ச படிப்புக்கு உபயோகம் .. இன்னொரு கம்பெனில சாதாரண ஊழியனா இருந்தால் தான் மா கத்துக்க முடியும் ..சொந்தமா நமக்குன்னு ஒரு கம்பெனி தொடங்கணும்மா .. இந்த துறையிலயும் நம்ம நிறுவனம் கால் பதிக்கணும் .அதுக்கு முன்னால நான் முழுமையா தயாராகணும் ..என்னை தடுக்காதீங்க ப்ளீஸ்." என்று உறுதியாக கூறிவிட கணவரும் இளைய மகனும் அவன் பக்கமே நின்றுவிட ஒன்றும் செய்ய முடியவில்லை சத்யாவால்.
தாயின் மேல் மிகுந்த பாசம் அவனுக்கு ..அவர் சொன்னதற்கு எதிராக அவன் செய்த ஒரே காரியம் இந்த வேலையில் சேர்ந்தது தான் ! அவர் முகம் கசங்கினால் அவனால் தாங்க முடியாது.. எப்படியாவது அவரை சிரிக்க வைக்க படாத பாடு படுவான்.. இயற்கையாகவே வீட்டின் முதல் பிள்ளைகளுக்கு தாயின் மொத்த அன்பும் தந்தையின் முழு கவனிப்பும் கிடைப்பதும் .. தாய்க்கும் மூத்த பிள்ளைக்கும் இடையில் ஒரு பிணைப்பு இருப்பதும் சகஜம் தானே !

எப்படியோ தாயை சமாதானப்படுத்தி கேம்பஸில் தேர்வான அந்த முன்னணி நிறுவனத்தில் பணியமர்ந்து விட்டான் ரஞ்சித். அந்த வாய்ப்பு அவன் வாழ்வையே மாற்றி போடும் என்று அவன் நினைக்கவேயில்லை!

அம்ருவால் தன் கண்களையே நம்ப முடியவில்லை!
அவன் தானா அது ? அன்று ஜீன்ஸ் டி ஷர்ட்டில் வசீகரித்தது போல் இன்று வெள்ளையில் சிறு கட்டமிட்ட முழுக்கை சட்டையும் சாம்பல் வண்ண பேண்ட்டும் அணிந்து தலை கோதியபடி நின்று பேசிக் கொண்டிருந்தவனை காணுகையில் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

'அவனுக்கு அவளை நினைவிருக்குமா ? ஆறு மாதங்கள் முன்பு ஏற்பட்ட சந்திப்பு ..நேருக்கு நேராக பேசிக் கொள்ள கூட இல்லை ..இதில் அவனுக்கு இப்படி ஒரு பெண்ணை பார்த்தது எங்கிருந்து நினைவிருக்கும்? அவனை பார்க்காதது போல் போய் விடுவதே உத்தமம்' அவள் தனக்குள் முடிவெடுத்து அவன் புறம் திரும்பாமல் நேராக கலந்தாய்வு அறையினுள் நுழைந்து தனக்கான இருக்கையை அடைந்து அமர்ந்து கொண்டாள்.
இவளது கல்லூரி நண்பர்கள் மூவர் இவளோடு சேர்ந்து தேர்வாகியிருக்க அவர்களோடு சென்று அமர்ந்தாள். இவளது உயிர் தோழி காயத்ரியும் அதில் ஒருத்தி.

மற்ற இருவர் சஞ்சய் மற்றும் அக்ஷரா இருவரும் நெருக்கம் இல்லை என்றாலும் நட்பாக பழக கூடியவர்கள் தான்.

ஆகையால் நால்வருக்குமே நிம்மதி தான் .தெரியாத இடத்தில் புதிதான பாதையில் பயணிக்கையில் தெரிந்த முகங்கள் இருப்பது கூடுதல் தைரியம் அளிக்கும் அல்லவா ?

மூவரும் இவளை கண்டதும் வரவேற்று முகமன் கூற .. பாவையின் மனமோ வாயிலின் வெளியே அலைபேசியில் மூழ்கி இருந்தவனிடமே !

இதற்குள் இவர்களது பயிற்சியை ஒருங்கிணைப்பவர் வந்து விட வரவேற்பு உரையை தொடங்கினார் அவர்.

பின்னர் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து தன்னை பற்றி கூறுமாறு அவர் சொல்லவும் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ரஞ்சித் எழுந்து தன்னை குறித்து சில நொடிகள் பேசிவிட்டு அமர இவள் இதயம் பன்மடங்கு துடித்தது.

"ஏய் இவன் அவன் தானேடி.. தட் கிட்டார் கய் ? " காதை கடித்தாள் காயத்ரி .

அவளுக்கு தோழியின் மனம் அத்துப்படி.

இருவருக்கும் அடிக்கடி நடக்கும் உரையாடல் இவனை குறித்து தான் ..இவள் அலைபேசியில் இருவருமாக பரிசு வாங்கும் புகைப்படம் பதிந்து வைத்திருந்தாள் அம்ரு . அது பார்வையில் தட்டுப்பட்டுவிட்டால் காயத்ரி கேட்க தொடங்கி விடுவாள்.

"ஹே அவனை லவ் பண்றதானே அம்ரு ?"

"தெரியல டி! ஆனா பிடிச்சிருக்கு ."

"எவ்வளோ பிடிச்சிருக்கு ?"

"லவ் பண்ற அளவுக்கு புடிச்சிருக்கு "

"நக்கலா ?"

"நிஜம் டி காயு "

"அப்போ எதுக்குடி அம்ரு வெயிட்டிங் ?"

"அதுக்காக உடனே லவ் பண்ணிட முடியுமா ?"

"கொழப்பாத அம்ரு ! லவ் பண்றியா இல்லையா ?"

"யாரு என்னனு தெரியாது. அதுக்குள்ளே எப்படிடி ?"

"அவ்வளவு தானே ..அவன் காலேஜ் இங்கேருந்து முக்கால் மணி நேரம் தான் ..ஜஸ்ட் 45 மினிட்ஸ் "

"அதுக்கு ?"

"இப்பவே நாம அங்க போலாம் .."

"அப்பறம் ?"

"அவனை சந்திக்கலாம் .."

"அப்பறம் ?"

"கை குலுக்கலாம் .. "

"அப்பறம்?"

"பேசலாம் .. பழகலாம் .."

"அப்பறம் ?"

"பிடிச்சிருந்தா லவ் பண்ணலாம் "

"அடியே ..நாம இல்லை நான் மட்டும் தான் "

"ம்ம் ..இதிலெல்லாம் விவரமா இரு .. அப்போ கெளம்பு "

"நோ ..இல்லை "

"ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தாண்டி ..சும்மா நிழலை மட்டுமே ரசிச்சிட்டிருக்க கூடாது . நிஜத்தை சந்திக்கணும்."

"இல்லடி அவனை பத்தி எதுவுமே தெரியாது.. எப்படி இப்படி ஒரு பெரிய முடிவை எடுக்க முடியும்? கொஞ்சம் பயமா இருக்கு. அதான் .."

“இது என்ன டி ஐநா சபை தீர்மானமா? ஆராய்ந்து கலந்தாலோசித்து எடுக்க ? இட்ஸ் லவ் ! அது எந்த தருணத்தில் நம்ம ஆட்கொள்ளும்னு எதிர்பார்க்கவே முடியாது"

"ஓகே ..அப்போ அப்படி ஒரு தருணத்துக்காக காத்திருக்கேன்னு வச்சுக்கோ " என்று மனதுக்குள் ஒரு முடிவோடு சொன்னாள் அம்ரு.
வாழ்வு நம்மை சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் நாம் மீண்டும் சந்திப்போம் ..அப்போது எனக்கு உன்மேல் ஏற்பட்ட ஈர்ப்பு அதீதமானால் .. காதல் சூறாவளி நம்மை சுழற்றியடித்தால் அதில் ஆனந்தமாய் சுழல்வோம் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் காயத்ரி சும்மா இல்லை.

ரஞ்சித்தின் கல்லூரியில் பயிலும் தன் பள்ளி நண்பன் ஒருவன் மூலம் அவனை பற்றி விசாரிக்க ..குணத்திலும் பண்பிலும் குறை சொல்ல முடியாது என்று தெரிய வரவும் தான் அவள் ரஞ்சித்தை குறித்து பேசியது.

ஆனால் அவளும் அறியாதது ரஞ்சித் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் என்பது.அவன் எங்குமே தன் செல்வ நிலையை காட்டிக் கொள்ள மாட்டான்.

ரஞ்சித்தும் அம்ருவை பற்றி விவரங்கள் சேகரித்தவன் அதற்குமேல் அவளை சந்திக்க முயற்சி எதுவும் எடுக்கவில்லை. உண்மையிலேயே தன் மனதில் இருப்பது காதல் தானா ? இல்லை அதீதமான ஈர்ப்பா ? என்ற சந்தேகமே அவனுக்கும்..

ஆனால் மனதின் ஓரம் எப்போதும் அவள் குறித்த ஏதோ ஒன்று நின்றிருக்க அவளை சந்திக்கும் தருணத்தை சற்று தள்ளி போடுவோம் என்றே முடிவெடுத்தான் .

இன்றைய தலைமுறையின் வரமா சாபமா இது ? தெரியவில்லை!

எதைக்குறித்தும் திடமான முடிவு எடுக்க தயக்கம்.. சரிவருமா வராதா என்ற ஐயப்பாடுடனே முடிவுகளை ஒத்திவைத்து ... நாங்கள் முன்ஜாக்கிரதைவாதிகள் என்று காட்டிக் கொள்கிற வழக்கம் ஏற்பட்டுவிட்டது.

அந்த அரங்கில் இருந்த அனைவரும் தங்களை குறித்து அறிமுகப்படுத்திக் கொள்ள ..யார் முகமும் இவள் கருத்தில் பதியவில்லை... யார் குரலும் கேட்கவில்லை .. அவனது கணீர் குரலே மனதின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருக்க ..விதி நம்மை சேர்த்துவைக்க முடிவு செய்துவிட்டதா என்று மானசீகமாக அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் அம்ரிதா.

அவன் தன்னை பார்ப்பானா என்று ஒரு மனம் ஏங்க.. பார்த்துவிட்டு நினைவு வராமல் முகம் திருப்பிவிட்டால் என்ன செய்வது என்று ஒரு மனம் பொங்க .. அம்ருவின் மனதிற்குள் ஒரே போராட்டம் ..

அவனை பார்த்தால் என்ன செய்வது ? புன்னகைப்பதா ? அறிமுகமற்ற பார்வை பார்ப்பதா ? கைகுலுக்குவதா ? தலைகுனிந்து கடந்து விடுவதா ?

பெண்ணவள் உள்ளுக்குள் சிக்கி சிதறிக் கொண்டிருக்க .. இவள் முறையும் வந்தது.

இவள் எழுந்து "ஐயம் அம்ரிதா மோகன் " என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவும் முதல் வரிசையில் இருந்து மின்சாரம் பாய்ந்தவன் போல் திரும்பி பார்த்து ரஞ்சித் விரிந்த புன்னகையை அளிக்க அவ்வளவு நேரம் மனதோடு இருந்த போராட்டங்கள் விடைபெற விழிகள் மின்ன நின்றாள் அம்ரு.

அதன் பிறகோ.. இருவருக்குமே அங்கு நடந்த எதிலுமே மனம் நிற்கவில்லை ... இருவரது பிம்பம் மட்டுமே மற்றவருக்கு தெரிய ..சுற்றிலும் எல்லாம் விலகி நிற்பது போல் ஒரு மாயை!

அன்றைய கல்லூரி கலைவிழா நாளின் நிகழ்வு மனதுக்குள் இனிமையாய் ரீவைண்ட் ஆக அவள் மனதினுள் காதல் மாமழையாய் பொழிய .. அவன் மனதுக்குள்ளே ஏ.ஆர்.ஆர். இசை பிரவாகத்தை பொங்க விட்டிருக்க அம்ருவின் பளிங்கு விழிகள் 'கண்ணாமூச்சி ஏனடா ' என்று இறைஞ்சிக் கொண்டிருந்தன ...

"ஓகே ..தட்ஸ் தி எண்ட் ஆப் திஸ் செஷன்" அபஸ்வரமாய் ஒருங்கிணைப்பாளரின் குரல் ஒலிக்க.. அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து வெளியேற இவர்களும் எழுந்து நடந்தனர்.

காதல் தன் களியாட்டத்தை வெற்றிகரமாக தொடங்கியது !






 
இரண்டு பேரும் தங்களுக்கு வந்தது வெறும் ஈர்ப்பா இல்லை காதலா என்று தெரிஞ்சிக்க கொஞ்ச நாள் காத்திருக்காங்க 🤗🤗🤗🤗🤗🤗

ரஞ்சித் முதலில் அவளை கவனிக்கல போல 😉😉😉 அவ பேரை கேட்டதும் உலகமே மறந்துடுச்சோ 🤣🤣🤣🤣🤣🤣🤣

ப்ரித்வியோட சம்யுக்தா அம்ரி தங்கச்சி தானா 🤔🤔🤔🤔
 
Top