Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -13

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -13

யஷ்வந்தின் அறையில் அமர்ந்திருந்தாள் அம்ரிதா.

அம்ரிதாவும் ரஞ்சித்தும் திருமண அழைப்பிதழோடு வந்ததில் அலுவலகத்தில் பெரும்பாலானோருக்கு ஆச்சரியம் என்றால், சிலருக்கு அதில் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
அதில் ஒருவன் இவர்களது மேனேஜர் யஷ்வந்த் !

மும்பையை சேர்ந்தவன். சமீபமாக தான் இவர்களது நிறுவனத்தில் பணி புரிகிறான். வந்த நாளில் இருந்தே அம்ரிதாவின் மீது அவனுக்கு ஒரு கண்!

அவளது அழகும், இனிமையான குணமும், திறமையும்,எல்லாவற்றுக்கும் மேலாக அவள் லகரங்களில் வாங்கும் ஊதியமும் அவனை ஈர்க்க அவள் மீது ஒரு தலையாக விருப்பம் கொண்டிருந்தான். இதனால் அவளிடம் எப்போதும் வழிந்து கொண்டே இருப்பான்.

இருந்தாலும் அம்ரு அதனை பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்தவில்லை என்பதை விட .. அவளுக்கு அவன் நடத்தையே வித்தியாசமாக தெரியவில்லை.

அவளது அழகு எப்போதும் பல விழிகளை ஈர்க்கும் என்பதால்.. அவளுக்கு அது பெரிதாக படவில்லை.

அவளுக்கு பெரும்பாலும் மனிதர்களை எடை போட தெரியாது .. எந்த விழிகள் ரசனையோடு பார்க்கின்றன.. எவை குயுக்தியோடு பார்க்கின்றன என்று பிரித்தறிய தெரியவில்லை. சுலபமாக யாரையும் நம்பி விடுவாள்.

அவளை மேலிருந்து கீழாக அளந்து பார்த்தவன் "ரஞ்சித் !?" என்றான் கேள்வியாய்.
அம்ரு அவனை புரியாமல் நோக்க ..

" நெவெர் எக்ஸ்பெக்டட் திஸ் அம்ரு " என்றான் யஷ்வந்த், பெரிய அதிசயத்தை கண்டது போல்.

"ஏன் ? வாட்ஸ் ராங் ?" என்றாள் அம்ரு புரியாதவளாய்.

" நீ ரஞ்சித் கிட்ட பேசி கூட நான் பார்த்தது இல்லை . இப்போ உங்களுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டதும் என்னால நம்பவே முடியல " ஹிந்தி வாடையோடு கூடிய ஆங்கிலத்தில் அவன் கூற ..

"ஓ அதுவா .. "என்றவள் விளக்கம் எதுவும் தரவில்லை "இதுல நம்பாம இருக்க என்ன இருக்கு ?"என்றாள் அப்பாவியாய் .

"என்ன இருக்குன்னு கேக்குற ? என்ன இல்லை ?" என்றவன் சற்றே இடைவெளி விட அம்ருவின் மனதில் சிறு குழப்பம்.

"உனக்கு உன்னோட கேபாஸிட்டி தெரியல அம்ரிதா .. உன் அழகு ,அறிவு, திறமை இதுக்கெல்லாம் ரஞ்சித்தால ஏணி வச்சா கூட எட்ட முடியாது. இன்னிக்கு நம்ம நிறுவனத்தில் மிக திறமையான ஒரு ப்ரோக்ராமர்னா அது நீதான். ரஞ்சித் எல்லாம் பக்கத்துலேயே நிக்க முடியாது. நீ கிடைக்க அவன் ரொம்ப லக்கி " என்றவன் ஒரு பெரிய சாக்லேட் பாரை நீட்ட

"நாந்தான் உங்களுக்கெல்லாம் ஸ்வீட் கொடுத்திருக்கணும் ..நீங்க தரீங்க ?" என்றாள் அம்ரு.

"ஒரு குட் நியூஸ் அம்ரிதா .. உங்களுக்கு மெயில் பண்ணிருக்காங்க ஹெட் ஆபிஸ்லருந்து ..உங்களுக்கு ஆன்சைட் வாய்ப்பு கிடைச்சிருக்கு .. அதுவும் யு எஸ் ..கலிபோர்னியா .. மூன்று மாதங்கள் ... இந்த ப்ராஜெக்ட் உங்கள் வாழ்வில் ஒரு பெரும் முன்னேற்றத்தை கொடுக்கும் . வாழ்த்துக்கள்! "

இந்த செய்தி கேட்டதும் அம்ருவிற்கு தலை கால் புரியவில்லை.

அவள் வெகுவாக எதிர்பார்த்த வாய்ப்பு .. பல வருடங்களாக அந்த நிறுவனத்தில் உழைப்பவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு ..இரண்டே வருடங்களில் அவளுக்கு கை வந்திருக்கிறது. அதுவும் இரு மாதங்கள் முன்பு தான் பதவி உயர்வும் கிடைத்தது.

இப்போது சம்பளமும் பெரிதாக கூடும் ..பணம் கூட இரண்டாம் பட்சம் தான் . ஆனால் இதனால் கிடைக்க போகும் அனுபவம் ..அதனால் பிற்காலத்தில் அவளது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் .

அதுவும் நம் நாட்டிலுள்ள பலரை போல் அமெரிக்க மோகம் அம்ருவுக்கும் உண்டு .

சந்தோஷம் பொங்க தன் மனம் கவர்ந்தவனிடம், தன் வருங்கால கணவனிடம் இதை முதலில் சொல்ல வேண்டும் என்று நினைத்தவள் யஷ்வந்திற்கு நன்றியுரைத்துவிட்டு தன் இடத்திற்கு வர ..இதற்குள் அலுவலகம் முழுக்க விஷயம் கசிந்து விட்டிருந்த
இவளோடு சேர்ந்து இன்னும் மூவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க அதில் ஒருவனான சந்தோஷ் வந்து இவளிடம் வாழ்த்து சொல்ல ..இவளும் பதிலுக்கு வாழ்த்தினாள் . மற்றவர்களின் பொறாமை கலந்த வாழ்த்து ஒருபுறம் சந்தோஷம் தந்தாலும் அவளது உயிர் தோழி காயு அன்று வரவில்லை ..ரஞ்சித்தும் மதியம் மேல் தான் வருவதாக சொல்லியிருந்தான் .

இருவரிடமும் பகிர முடியாத ஏக்கம் தாக்க சோகமாக அமர்ந்திருந்தவளின் விழி வட்டத்திற்குள் ரஞ்சித் விழ.. மட்டுப்பட்ட உற்சாகம் மறுபடி ஊற்றாய் பொங்கியது.
அலுவலகத்தில் இருக்கிறோம் என்பதை மறந்தவளாய் அவனை ஓடி சென்று அணைத்துக் கொண்டாள் அம்ரு .



நிச்சயம் முடிந்து விட்டாலும் சத்யபாமா முரண்டிக் கொண்டே தான் இருந்தார்.

இந்த காலத்தில் காதல் திருமணங்கள் சகஜமாகி விட்டாலும் சத்யாவை பொறுத்தவரை எதை விட்டுக் கொடுத்தாலும் அந்தஸ்து , பணபலம் இதெல்லாம் ரொம்ப முக்கியம்.
மோகன் தனுஜா இருவரும் கலப்புத் திருமணம் என்பது கூட அவருக்கு மறுப்பாயில்லை!
ஸ்டேட்டஸ் மட்டுமே முக்கியம் என்று பட்டது. தங்களுக்கு இணையான செல்வ நிலை இல்லையே என்பதாலேயே மறுத்தார். அதிலும் அம்ருவின் அபரிமிதமான அழகு .. அவருக்குள் ஒரு பயத்தையே உண்டு பண்ணியது. மகன் மனைவியின் பின் சென்று விடுவானோ என்ற பயம் .

பெண் பார்க்க செல்லும் முன் வீட்டில் பெரும் களேபரம் நடந்தது.

அவர்தான் முதலில் ரஞ்சித்தின் திருமணம் குறித்து ஆரம்பித்தார் ..அவரது தோழி ஒருத்தி ..இவர்களை போலவே பல வணிக நிறுவனங்கள் கொண்ட குடும்பம் அவரது.. தன் பெண்ணிற்கு ரஞ்சித்தை கேட்டிருந்தார்.

"ரஞ்சு கண்ணா.. உனக்கு ஷிவானி தெரியும்ல ..அவளை பத்தி என்ன நினைக்கிற ?" என்று தாய் ஆரம்பிக்கவுமே ரஞ்சித்திற்கு புரிந்துவிட்டது தாய் எங்கே வருகிறார் என்று.

மூடி மறைக்கும் எண்ணம் இல்லாததால் உடைத்து சொல்லிவிட்டான்.."அம்மா ..ஐ நோ வாட் யூ ஆர் ஆஸ்கிங் . நான் ஒரு பெண்ணை லவ் பண்றேன் மா ..சோ நோ ஷிவானி ." என்று பட்டென்று போட்டு உடைத்துவிட.. உள்ளுக்குள் சத்யாவிற்கு ஏமாற்றம் தான்.. ரஞ்சித் எப்போதுமே அவரது பேச்சை தட்டமாட்டான்.. முதல் முதலாக வேலைக்கு சேர்ந்ததில் இருந்துதான் அவரது பேச்சை மீறி நடக்கிறான்.. இப்போதும் தான் பார்க்கும் பெண்ணைத்தான் மணமுடிப்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்க ..அவன் காதல் என்றதும் அவருக்கு அதிர்ச்சிதான்.

மேலும் அம்ரிதாவை பற்றிய விவரங்கள் அறிய அறிய வெறுப்பும் ஏமாற்றமும் கூடிக் கொண்டே போனது.

நவனீக்கு ரொம்பவே சந்தோஷம் .. மகன் தனக்கானவளை தானே தேர்ந்தெடுத்தது !
அவருக்கும் சத்யாவுக்கும் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான் ..அதிலும் சத்யாவின் தந்தை வரதராஜனுக்கு நவநீ என்றால் ரொம்ப பிரியம் ..அவரது ஒன்று விட்ட தங்கை மகன் தான் நவநீ ..மாமாவின் தயவிலேயே படித்து, பின் அவருக்கு உதவியாக அவரது கம்பெனியிலேயே நிர்வாகம் செய்ய, எப்போதும் அவர் ஒரு வேலைக்காரன் போன்றே எண்ணமுண்டு சத்யாவிற்கும் அவரது தாய்க்கும். அதனால் அவரையே மாப்பிள்ளையாக வரதராஜன் தேர்ந்தெடுக்க இருவருக்கும் அதில் விருப்பமில்லை.

நவனீக்கும் பெரிதாக விருப்பமில்லை.. எப்போதும் மாமன் மகளுக்கு தன் மீது ஒரு எள்ளல் உண்டு என்று அறிவார்.
அதனால் அவர் மறுக்க .. கொஞ்சம் கூட வசதியில்லாத குடும்பம் என்று சத்யா மறுக்க ..திடீரென்று வரதராஜனுக்கு ஒரு விபத்து !

மரணப் படுக்கையில் இருந்தவருக்கு தன் மகளையும் தான் கட்டிக் காத்த தொழிலையும் நம்பி ஒப்படைக்க தன் மருமகன் நவனீயை தவிர யாரும் தோது என்று படவில்லை . அதனால் அவசர அவசரமாக மருத்துவமனையில் வைத்தே திருமணம்.

சத்யாவிற்கோ ஏற்கனவே நவநீ மேல் பெரிதாக அபிப்ராயமில்லை. இப்போது தான் கனவு கண்ட எந்த விஷயமும் இல்லாமல் ஒரு அவசர திருமணம்!

மொத்த வெறுப்பும் நவநீ மற்றும் அவரது குடும்பத்தார் மீதுதான். மெல்ல மெல்ல நவனீயின் நல்ல குணமும் அன்பும் அவரை ஈர்த்தாலும் தன் அன்பை வெகுவாக வெளிப்படுத்தமாட்டார். அதிலும் நவனீயின் குடும்பம் சுத்தமாக ஆகாது. இப்படி பொருந்தாத இடத்தில் தந்தை கட்டிக் கொடுத்துவிட்டாரே என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு. இப்போது மகனும் அப்படி வந்து நிற்க ..அதிலும் அவர் பேச்சை தட்டவே செய்யாத மகன் இப்படி செய்யவும் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இதற்கு அப்படியொன்றும் மோகனுக்கு தாழ்ந்த நிலையில்லை. அப்பர் மிடில் க்ளாஸ் தான்!

இப்போது இரு பெண்களுமே நன்கு படித்து நல்ல வேலையில் இருக்க பின்னேற்றம் என்பதே இல்லை.

ஆனாலும் சத்யாவிற்கு திருப்தியில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.

ப்ரித்விக்கோ ஏற்கனவே தெரிந்தது தான் ..ரஞ்சித் தன் தம்பியிடம் மட்டும் ஏற்கனவே பகிர்ந்திருக்க ..இப்போது வீட்டிலும் சொன்னது அவனுக்கும் சந்தோஷம் தான். ஆனால் தாயின் முகம் இரு சகோதரர்களையும் கவலை கொள்ள வைத்தது.

"ரஞ்சு கண்ணா ..என்னடா இது ஒரு சாதாரண குடும்பத்தில இருந்து பொண்ணு எடுக்க சொல்றியா ? நம்ம அந்தஸ்துக்கு தகுந்த இடமா இருக்க வேண்டாமா ?"

"அம்மா ..ப்ளீஸ் . இது ஒன்னும் அரேஞ்ட் மேரேஜ் இல்லை ..எல்லா பொருத்தமும் பாத்து முடிவு பண்ண .தே ஆர் இந்த லவ் " என்றான் ப்ரித்வி.
" எல்லா பொருத்தமும் இருந்தால் தான்டா லைஃப் நல்லாருக்கும். நீ சொல்ற ‘லவ்வ்வு’ … அதுவும் நிலைச்சிருக்கும் ”

"மொதல்ல மனசு பொருந்தனும்மா .. அப்புறம்தான் மத்த பொருத்தமெல்லாம்." என்றார் நவநீ .. மனப்பொருத்தமில்லாத வாழ்வில் இத்தனை வருடங்களாக அவதிப் படுபவரல்லவா ?

" அம்மா ..நீங்க அம்ரிதாவை மீட் பண்ணா இப்படி சொல்லமாட்டீங்க ..ஷி இஸ் வெரி ஸ்வீட்.. ரொம்ப அழகாயிருப்பா. அன்பாயிருப்பா . அவங்க குடும்பமும் நல்ல டீசென்ட் மா " என்று தன் தாயை சமாதானப்படுத்த முயன்றான் ரஞ்சித்.


"இப்போ எல்லாமே நல்லாத்தாண்டா இருக்கும் . கணவன் மனைவின்னு வரும்போது கூடவே மாமனார் மாமியார் குடும்பம் சுற்றம்னு எல்லாமே இருக்கில்ல . என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க . இப்படி சத்யா வக்கே இல்லாத குடும்பத்தில போய் பொண்ணு எடுத்திருக்கானு சொல்ல மாட்டாங்களா ?" என்று பொரிய ப்ரித்வி மறுப்பாய் இடையிட்டான்..

"அம்மா நீங்கபேசறது ரொம்ப தப்பு! பணத்தை வச்சு எல்லாரையும் எடை போட கூடாது. மழை வெள்ளம்னு நம்ம சென்னையே மூழ்குச்சி ..அப்போல்லாம் எல்லாரும் ஒரு மடக்கு தண்ணியும் ஒரு வாய் சாப்பாடும் கெடக்காதான்னு தான் ஏங்குனாங்க ..பெரிய பணக்காரங்க உட்பட .அப்போ ஏழையா இருந்தாலும் மத்தவங்களுக்கு உதவி செய்தவன் தான் எல்லாருக்கும் கடவுள் மாதிரி தெரிஞ்சான்.. பணத்தால சாதிக்க முடியாததும் இருக்கும்மா. காதலும் அதில ஒன்னு தான்."

மகன் பேசியதை அவர் பெரியதாகவே எடுக்கவில்லை.
“நீ சொன்ன தண்ணியும் சாப்பாடும் தான் முக்கியமா இருந்தது.. இல்லைனு சொல்லலை..ஆனால் அதை கொடுக்கவும் நம்மளை மாதிரி நாலு பேர் நிவாரண நிதி கொடுக்கணும். பணம் தான் வாழ்க்கையோட அடித்தளம் ப்ரித்வி .அது இல்லன்னா காதல் கூட கசந்து போகும்."


"கரெக்ட்டு தான் மா .. அதையே தான் நானும் சொல்றேன். திகட்ட திகட்ட வாழ்க்கையை அனுபவிக்கிற அளவு பணம் நம்ம கிட்டயே இருக்கு. அதை அண்ணி குடும்பத்துகிட்டே எதிர்பாக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை."
எவ்வளவு பேசியும் வக்கீல் மகனிடம் சாதிக்க முடியவில்லை சத்யாவால். ஆனால் இதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ரஞ்சித்திற்கு அன்றைய தினத்தில் இருந்தே மனதுக்குள் ஒரு சிறு உறுத்தல் ஏற்பட தொடங்கியது... அம்மா சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்குமோ?
 
சத்யா பேசி பேசியே ரஞ்சித் மனசுல அந்தஸ்து வேற்றுமைய உருவாக்கிட்டாங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶

ப்ரித்வி மட்டும் தான் இந்த வீட்டுல தைரியமா தெளிவா இருக்கான் 😆😝😝😝😝
 
Top